எஸ்.வி.ராஜதுரை
பழங்கால வரலாற்றைப் புராணங்களிலும் கட்டுக்கதைகளிலும் தோய்த்தெடுப்பதில் வல்லவர்களான சங் பரிவாரத்தினரும் அவர்கள் சார்பில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவரும் வல்லபாய் பட்டேலின் வழி நடப்பவராகச் சொல்லிக் கொள்பவருமான அமித் ஷாவும் சமகால, மிக அண்மைக்கால வரலாற்றையும்கூடப் புரட்டி எடுத்துப் பொய்களில் பொரித்தெடுப்பதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் பிரிவு 370க்குத் திரிபுபடுத்தப்பட்ட விளக்கத்தைக் கொடுத்து அந்த மாநிலத்தை மூன்றாகப் பிளக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அவர்கள், அதை நடைமுறைப்படுத்த அக்டோபர் 31ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தது அவர்களுடைய வன்மம், வக்கிரபுத்தி, வெறுப்பு அரசியல் ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு.
அக்டோபர் 31 சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள்; இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாள்.
ஆர்எஸ்எஸ் தடையில் பட்டேலின் பங்கு!
நேரு அமைச்சரவையில் இருந்த வலதுசாரிகளில் முக்கியமானவர் வல்லபாய் பட்டேல் என்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சோமநாதர் கோயிலை சுதந்திர இந்தியாவின் அரசாங்க செலவில்லாமல் கட்டித்தர ஒப்புதல் அளித்தவர் அவர் என்பதும் சங் பரிவாரச் சக்திகள் நேருவுக்கு மேலான தலைவராக அவரைப் போற்றிப் புகழ்ந்து வருவதற்கான காரணங்களில் அடங்கும். ஆனால், காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆர்எஸ்எஸ் உடந்தையாக இருந்தது என்று அந்த அமைப்பைத் தடை செய்வதில் முக்கியப் பாத்திரம் வகித்தவரும் பட்டேல்தான் என்பதை இந்தப் பரிவாரங்கள் பேசுவதில்லை. இந்த முக்கிய உண்மையைக் குழி தோண்டிப் புதைக்க முயலும் இந்தப் பரிவாரத்தினர்,

இந்திய அரசியல் சட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370ஆம் பிரிவை பட்டேல் எதிர்த்தார் என்று தங்கள் சமூக வலைதளங்களில் அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பே அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். இதுதான் அமித் ஷா பரிந்துரைக்கும் ‘வரலாறு எழுது நெறி’.
370-ம் பட்டேலும்
வல்லபாய் பட்டேலின் நினைவுக்குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் 370ஆம் பிரிவை வரைவதிலும், அதை அரசமைப்பு அவையில் முன்மொழிந்து நிறைவேற்றுவதிலும் அவருடைய பாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.1949ஆம் ஆண்டு மே 15, 16ஆம் நாட்களில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கப்படுவது பற்றிய விவாதம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்த விவாதத்தில் ஜவகர்லால் நேருவும் ஷேக் அப்துல்லாவும் கலந்து கொண்டனர். அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழு உறுப்பினராக இருந்த கோபால்சாமி ஐயங்காருடன் பட்டேலும் சேர்ந்து எழுதிய வரைவுதான் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ஆக உருக்கொண்டது. நேரு அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த காரணத்தால் அந்தச் சட்டப் பிரிவை அரசமைப்பு அவையில் (constituent assembly) பிரேரிக்கும் பொறுப்பு பட்டேலுக்கு வந்து சேர்ந்தது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 35-அ, 370 ஆகியவற்றுக்குத் தனக்கு சாதகமான விளக்கத்தைக் கொடுத்து, ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும், அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தை ஏற்கனவே கலைத்திருந்ததன் மூலம், அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமலும் சங் பரிவார – பாஜக அரசாங்கம் செய்த ஜனநாயகப் படுகொலையை நியாயப்படுத்தச் சொல்லிவரும் பொய்களிலொன்றே பட்டேலின் நிலைப்பாட்டைத் திரித்துக் கூறுவதாகும்.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கான வெறுப்பு அரசியல் சூழலில் உருவாக்கிய அமைப்பு என்று வல்லபாய் பட்டேல், ஆர்எஸ்எஸ் மீது குற்றம் சாட்டினார். ஆனால், அதே வெறுப்பு அரசியலை நியாயப்படுத்துவதற்கு பட்டேலின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது சங் பரிவாரம்.
இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி – ஆர்எஸ்எஸ்
அக்டோபர் 31, இந்திரா காந்தியின் நினைவுநாள் மட்டுமல்ல, அவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டெல்லி முதலிய நகரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் உடைமைகளும் உயிர்களும் ஒழித்துக் கட்டப்படும் இனக்கொலை தொடங்கிய நாளும் அதுதான்.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்காகக் ‘கண்ணீர் வடித்தது’ ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வமான ஏடான ‘ஆர்கனைஸர்’ .அந்த ஏட்டால் வழிகாட்டப்படும் ஆர்எஸ்எஸ், இந்து – சீக்கிய ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்பதாகவும், முஸ்லிம்களிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றியதற்காக சீக்கியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவ்வப்போது கூறிவருகின்ற போதிலும், சாதியமைப்பையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து குருநானக்கால் தோற்றுவிக்கப்பட்ட சீக்கிய மதத்தை, இந்து மதத்தின் ஒரு பகுதி என்றுதான் இதுவரை கூறிவருகிறது.
ஆனால், இந்திரா காந்தி கொலையை அடுத்து சீக்கியர்கள் மீது ஏறத்தாழ இரு வார காலம் வன்முறைத் தாக்குதல்கள் நடந்தபோது அவர்களை இந்துக்களின் ஒரு பகுதியாகப் பார்க்கவில்லை ஆர்எஸ்எஸ்.
அந்த வன்முறைத் தாக்குதல்களை ஊக்குவித்த, உதவிய உயர்மட்டக் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் அமர்வு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர்நீதி மன்றத்திலுள்ள இரு நேர்மையான நீதிபதிகள், அவரது விடுதலையை ரத்துச் செய்துவிட்டு தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்பினர். இதுவிதிவிலக்காக நடந்த நீதி முறை. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 1984 முதல் இன்று வரை மத்திய அரசாங்கமும் நீதித் துறையும் சீக்கியர்களுக்கு நீதி வழங்கவில்லை.
சீக்கியர்களின் இனக்கொலைக்குக் காங்கிரஸே காரணம் என்று சங் பரிவாரம் அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தது. 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25இல் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜான்ஸி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் நரேந்திர மோடி “1984இல் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றது யார் என்ற கேள்விக்குக் காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும், ”சீக்கியர்கள் இனக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக எவரேனும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா?” என்றும் முழங்கினார். 2014இல், சந்தர்ப்பவாதப் பிற்போக்கு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தபோது மோடி, சீக்கியர்கள் இனக்கொலை செய்யப்பட்டதாக பிரச்சாரக் கூட்டங்களில் பேசிவந்தார்.

பிரதமராகப் பதவியேற்ற பின் 2014 அக்டோபர் 21அன்று நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், இந்திரா காந்தியின் கொலையை அடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள், “ இந்தியாவின் நெஞ்சைப் பிளந்த குத்துவாள்” என்றும் “ நமது சொந்த மக்களே கொலை செய்யப்பட்டனர், அந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக தேசம் முழுவதின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” என்றும் கூறினார். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்று புலம்பித் தீர்த்தார்.
ஆனால் 1998 முதல் 2004 வரை இருந்த பாஜக ஆட்சியின்போது அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விசாரணை செய்யவோ தண்டிக்கவோ எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்பதை அவர் ’மறந்துவிட்டார்’. 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நீடிக்கும் அவரது அரசாங்கம் அந்த இனக்கொலை தொடர்பாக மேற்கொண்ட உருப்படியான நடவடிக்கை ஒன்றைக்கூட அவரால் இதுவரை சொல்ல முடியவில்லை. அதனால்தான் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலை அவரது பிரச்சாரத்தில் இடம் பெறவில்லை.
பொற்கோயில் தாக்குதலுக்குக் காரணம் அத்வானி

இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த விஷயம், அகாலி தளத்தை உடைப்பதற்காக அவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட சாந்த் பிந்திரன்வாலே இந்திராவுக்கு எதிராகத் திரும்பியதும், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் பிடிப்பதற்காக இந்திராவின் ஆணையின்பேரில் சீக்கியர்களின் புனித இடமான பொற்கோயிலுக்குள் இந்திய இராணுவம் புகுந்து அங்குள்ள முக்கிய ஆவணங்களையும் புனிதச் சின்னங்களையும் நாசப்படுத்தியதும், ஆயிரக்கணக்கான புனிதப் பயணிகளைக் கொன்றதும்தான்.
சீக்கிய மதம் இந்து மதத்தின் பகுதி என்று சொல்லிவரும் சங் பரிவாரத்தின் முக்கியப் புள்ளிகளிலொருவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான எல்.கே.அத்வானி எழுதியுள்ள சுயசரிதையில் (My Country, My Life), பொற்கோயிலுக்குள் இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று இந்திரா காந்தியை நிர்பந்தித்தது தாமே என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்ஸின் சீக்கிய எதிர்ப்பு
இது ஒருபுறமிருக்க டெல்லியிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் சீக்கியர்களின் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்த போது, இந்த ஆண்டு மோடி அரசாங்கத்தால் ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளவரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய சித்தாந்திகளிலொருவராக இருந்தவருமான காலஞ்சென்ற நானா தேஷ்முக், 1994 நவம்பர் 8 ஆம் தேதியன்று ‘ஆன்ம பரிசோதனைக்கான தருணங்கள்’ (Moments of Soul Searching) என்ற தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டார்.· முக்கிய அரசியல் தலைவர்களுக்கு விநியோகிப்பட்ட அந்த சுற்றறிக்கை ’இந்துத்துவ’த்தின் பிதாமகன் வி.டி.சாவர்க்கரால், இந்தியாவின் சுதேச மதங்களிலொன்று என்று கூறப்பட்ட சீக்கிய மதத்தின் மீது ஆர்எஸ்எஸ் கொண்டிருப்பது நேசமல்ல, பகைமைதான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஆவணம் ஆகும்.
இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்கள் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இரு சீக்கியப் படைவீரர்கள் என்பது உண்மைதான். பொற்கோயில் நிகழ்வின் காரணமாக இந்திரா காந்திமீது சீக்கிய சமுதாயத்தில் கொந்தளிப்பு இருந்துகொண்டிருந்த சமயத்தில் அவரது மெய்க்காப்பாளர்களாக இரு சீக்கியர்களை நியமித்தவர்கள் யார், இந்திரா காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த பிற சக்திகள் யாவை என்ற விவரங்களை மூடி மறைத்துவிட்டது அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கங்கள்.
ஆனால், அந்த சீக்கியப் படைவீரர்களையும் அந்தக் கொலைக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவர்களுமான அப்பாவி சீக்கிய மக்களையும் ஒன்றாகப் பார்த்தவர்கள் காங்கிரஸ் குண்டர்கள் மட்டுமல்ல; நானா தேஷ்முக்கும்தான்.
இந்திரா காங்கிரஸ் – ஆர்எஸ்எஸ் கூட்டுச் சதி!
அவரது மேற்சொன்ன சுற்றறிக்கையை அப்போது இன்னும் ‘சோசலிஸ்டாகவே’ இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டெஸை ஆசிரியராகக் கொண்டிருந்த ’ப்ரதிபிரகாஷ்’ என்னும் இந்தி வார ஏடு 25.11.1984ஆம் தேதிய இதழில் ‘இந்திரா காங்கிரஸ்- ஆர். எஸ்.எஸ். கூட்டுச் சதி’ என்ற தலைப்பில் வெளியிட்டு, ஆர்எஸ்எஸ்ஸின் சிறுபான்மையினர் விரோத பாசிச நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியது.
நானா தேஷ்முக்கின் ‘ சுற்றறிக்கை’யில் காணப்படும் முக்கிய கருத்துகள் பின் வருமாறு:
*சீக்கியர்களைப் படுகொலை செய்தது எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரோ, சமூக விரோதிகளோ அல்லர். மாறாக நியாயமான கோப உணர்வின் காரணமாகவே அந்தக் கொலைகள் நிகழ்ந்தன.
* இந்திரா காந்தியைக் கொலை செய்த படைவீரர்கள், சீக்கிய சமுதாயத்தின் கட்டளைப்படியே அதனைச் செய்தனர். அந்தத் தாக்குதல்களை சீக்கியர்கள் தாங்களாகவே வரவழைத்துக் கொண்டனர். இந்திராகாந்தி கொலைக்குப் பிறகு நடந்து கொண்டிருக்கும் கலவரங்களின் போது சீக்கியர்கள் தங்கள் சுயபாதுகாப்புக்காக எதையும் செய்திருக்கக்கூடாது. அப்படி செய்ததால்தான் அவர்கள் வன்முறையாளர்களுக்கு இரையாகினர்.
* பொற்கோயில் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் போற்றுதலுக்குரியது. அதை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தேசவிரோத சக்திகள். சீக்கியர்களின் அதிதீவிரவாதம் பற்றி தேசம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பொறுப்பை சீக்கிய அறிவாளிகள்தாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள்தாம் சீக்கியர்களைப் போர்க்குணமுள்ள சமுதாயமாக மாற்றினர். காலிஸ்தான் முழக்கத்தை எழுப்பும் தீவிரவாதிகளை உருவாக்கினர். பொற்கோயில் மீது இராணுவத் தாக்குதல் நடந்தவுடன் சீக்கிய சமுதாயம் முழுவதும் பொங்கியெழுந்தது. ஆனால் பொதுவாக சீக்கியர்கள் எல்லோருமே, விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர, தீவிரவாதிகளையும் தேசவிரோதிகளையும் கண்டிக்கத் தவறினர். அதனால்தான் சீக்கியர்கள் தங்கள் மீதான தாக்குதல்களை நடத்த தேசப்பற்றுள்ள இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தேசப்பற்றுள்ள இந்துக்களின் எதிர்வினைதான்.
* இந்தியாவின் ஒற்றுமையைக் காக்கக்கூடியவராக இருந்த ஒரே தலைவர் இந்திரா காந்திதான். அத்தகைய மாபெரும் தலைவர் கொலை செய்யப்பட்டதால், சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
*மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து ஆர்எஸ்எஸ்-காரர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் கோல்வால்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அவரைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்கள் ஏந்திப் போராட வந்தனர். அவரை வேறு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல விரும்பினர். ஆனால் அவர் கூறினார்: “எந்த மக்களுக்கு நான் அர்ப்பணிப்புடன் சேவை செய்துவருகிறேனோ, அவர்களே என் உயிரை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், நான் எதற்காக உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் பொறுமையுடன் இருந்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது பின்னாளில் நிரூபிக்கப்படும்” என்றும் கூறினார். அதுபோலவே, இப்போது இந்திரா காந்தி கொலையை அடுத்து தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் சீக்கியர்கள் இதையெல்லாம் தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும்.
* இந்திரா காந்தி கொலையுண்ட அன்றைய தினமே இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ராஜிவ் காந்தி, “ பெரிய ஆலமரம் விழுந்துவிட்டால், நிலம் அதிர்வது இயல்பானதுதானே” என்று சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தினார் அல்லவா; அந்த ராஜிவ் காந்தி பிரதமராக ஆக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார் நானா தேஷ்முக் மேற்சொன்ன ’சுற்றறிக்கை’யில்.
* அதேவேளை, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைவிட வேறு எந்த உதவி கிடைக்கப்பெறாதவர்களும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுமான சீக்கியர்களுக்கு நிவாரணம் அளிக்குமாறோ, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறோ அன்றைய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் ஒரு வரிகூட நானா தேஷ்முக்கின் ‘சுற்றறிக்கை’யில் இல்லை.

* வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்கான சீக்கியர்கள் சிலருக்குப் பாதுகாப்புக் கொடுத்ததன் மூலம் இந்துக்கள் தங்களுக்கு இயல்பாகவே வாய்த்த மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியதாகக் கூறும் நானா தேஷ்முக், ஏதோ எல்லா இந்துக்களிடம் அப்படிப்பட்ட மனோபாவம் இருந்ததாகக் கதைகட்டுவதுடன், மனிதாபிமானம் கொண்ட இந்துக்கள் சிலரோடு சேர்ந்து கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நாத்திகர்கள், சமணர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் மட்டுமின்றி வெளிநாட்டுத் தூதரகங்களும் பல சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை மூடிமறைக்கிறார்.
காந்தி – இந்திரா காந்தி
சீக்கியர்கள் தாக்கப்படுவதைக் கண்டு மனமிரங்குவதுபோல பாசாங்கு காட்டும் நானா தேஷ்முக்கின் ‘சுற்றறிக்கை’ மகாத்மா காந்தி கொலையையடுத்து ஆர். எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்கப்பட்டதை, இந்திரா காந்தி கொலையையடுத்து சீக்கியர்கள் தாக்கப்பட்டதுடன் ஒப்பிடுவது மோசடித்தனமான விஷயம். ஏனெனில் காந்தி கொலையையடுத்து தாக்குதலை எதிர்கொண்டவர்கள் ஆர்.எஸ். எஸ்.காரர்களே தவிர ஒட்டுமொத்தமான இந்துக்கள் அல்ல. அந்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அப்போது ஏற்பட்ட பாதிப்பு அற்ப அளவிலானதே. ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்டதையடுத்து சீக்கிய சமுதாயத்தினர் அனைவருமே தாக்கப்பட்டனர்.
பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்துக் களப் போராட்டத்தை நடத்தி தங்கள் இன்னுயிரை இழந்த கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு வரி கூட இந்த ‘சுற்றறிக்கை’யில் இல்லை என்பது ஒருபுறமிருக்க அத்தகைய போராட்டத்தை ஏன் ஆர்எஸ்எஸ்.அமைப்பால் நடத்த முடியவில்லை என்பதை இந்த ‘சுற்றறிக்கை’ கூறுவதில்லை.
அதேபோல், தீவிரவாதிகளை ஒடுக்குதல் என்ற பெயரால் பல்லாயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் ‘காணாமல் போகும்படி’ செய்யப்பட்டதையோ, போலி ‘என்கவுண்டர்களில்’ கொல்லப்பட்டது பற்றியோ ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை.
2002 இனக் கொலைக்கு முன்னோடியான 1984
இந்திரா காந்தி கொலையை அடுத்து டெல்லி, கான்பூர், பொகாரோ முதலிய நகரங்களில் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களின் வழிகாட்டுதலுடனேயே சீக்கியர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன; சீக்கியப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்; மிகக்கொடூரமான முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதன் பொருட்டு அந்த வன்முறைக் கும்பல்களுக்கு மோட்டார் வாகனங்கள். எரிபொருள்,ஆயுதங்கள் ஆகியன வழங்கப்பட்டன.
போலீஸ் துறையில் இருந்த சீக்கிய உயர் அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதால், அவர்களால் எந்தக் கடமையையும் செய்ய முடியவில்லை, ஏறத்தாழ இரண்டு வார காலம் நடந்த இனக்கொலையின் போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டாமல் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமின்றி, ஒரு சில இடங்களில் சீக்கியர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியது. சீக்கியர்களிடமிருந்து வந்த புகார்களைப் பதிவு செய்யவோ, முதல் தகவல் அறிக்கையைத் தயாரிக்கவோ மறுத்துவிட்டது.
அந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுத் தவியாய்த் தவித்த பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களுக்கு நிவாரண முகாம்களைக்கூட காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கவில்லை. அவர்களுடைய சக மதத்தினரும் சிவில் சமுதாயத்தில் இருந்த நல்லெண்ணம் கொண்ட மனிதர்களுமே நிவாரண முகாம்களை ஏற்படுத்தினர்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், எத்தனையோ வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. அவை யாவும் இரு மதத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிகழ்வுகளாகும்.ஆனால் 1984இல் நடந்தது இரு மதத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிகழ்வு அல்ல. ஒருதலைப்பட்சமாக ஒரே ஒரு மதத்தினர் மீது ஆளும் கட்சியின் ஆசியுடனும் ஆதரவுடனும் நடத்தப்பட்ட இனக்கொலைதான் அது.
அந்த இனக்கொலைக்கு தார்மிக, அரசியல் , சட்டரீதியாக ராஜிவ் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.ஆனால், அந்த இனக்கொலை தொடர்பான நேர்மையான புலனாய்வையோ, விசாரணையோ செய்ய எந்த முயற்சியையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரக்கணக்கானோர், எச்.கே.எல்.பகத் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அந்த இனக்கொலைக்குத் தலைமை தாங்கினார்கள் என்று குற்றம் சாட்டினர். ஆனால் அந்தத் தலைவர்களை சீராட்டிப் பாதுகாத்தார் ராஜிவ் காந்தி. கண் துடைப்புக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து ‘ குற்றவாளிகள் யார்?’ என்ற அறிக்கையை வெளியிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரும் ஆளும் கட்சியினரால் வெளிநாட்டு ஏஜெண்டுகள் என்று தூற்றப்பட்டனர்.
2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலைக்கு எல்லாவகையிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்ததுதான் 1984ஆம் ஆண்டு சீக்கிய இனக்கொலை.
மன்னிப்பு கேட்ட மன்மோகன் சிங்

சீக்கியர்கள் இனக் கொலை செய்யப்பட்டதற்கு இதுவரை வருத்தம் தெரிவித்துள்ள, இந்திய மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஒரே காங்கிரஸ் தலைவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான். அவரும் ஒரு சீக்கியர்தான் என்பதால்தான் அதைச் செய்ய முடிந்திருக்கிறது. 2005 ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்: “சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்பதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. நான் சீக்கிய சமுதாயத்திடமிருந்து மட்டுமல்ல, இந்திய தேசம் முழுவதிலுமிருந்தும் மன்னிப்புக் கேட்கிறேன். ஏனெனில் 1984இல் நடந்தது நமது அரசமைப்புச்சட்டத்தில் தேச அடையாளம் பற்றிப் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ள கருத்தினை மறுப்பதாகும்”.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்போ, சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. ‘கல்வி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில்’ (National Council of Educational Research and Training) என்ற மத்திய அரசாங்கத்தின் நிறுவனத்திடம் கடந்த ஜூலை மாதம் சங் பரிவார அமைப்புகளிலொன்றான ‘ ஷிக்ஷா சண்ஸ்கிரிதி உத்தான் நியாஸ்’ சார்பில் தினாநாத் பத்ரா என்பவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். ’இந்தியாவின் வரலாற்றை இந்தியனின் நோக்கு நிலையிலிருந்தே எழுத வேண்டும்’ என்ற சங் பரிவாரக் கொள்கையைச் சிறிதும் பிசகின்றி பின்பற்றும் அவர் சமர்ப்பித்த அந்த அறிக்கை, பள்ளிப்பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய விஷயங்களின் பட்டியலொன்றைத் தந்திருந்தது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறிய அந்த அறிக்கையிலிருந்த பட்டியலில், 1984ஆம் ஆண்டு வன்முறைக்கு மன்னிப்புக் கோரி நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டிருந்தது!
அமித்ஷாவின் வரலாறு எழுது நெறிக்கான இன்னொரு எடுத்துக்காட்டுதான் இது.
கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.