ஈரான் நாட்டின் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் யுத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று மார்ச் 10-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்காவின் யுத்தம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வலியுறுத்துவதாக அதில் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஈரான் யுத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்; ஈரான் யுத்தத்தால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு, ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேல் யுத்தம் குறித்து விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டது.
இதனையடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் தொடர் அமளி நீடித்ததால் பகல் 3 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில், ஈரான் யுத்தம், கச்சா எண்ணெய் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீது நாளை முதல் மக்களவையில் 10 மணி நேர விவாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைப்பார்.
இந்த விவாதம் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களின் முடிவில், ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
