நா.மணி
தமிழ் நாட்டில் சாதி இருக்கிறது. இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது.
இந்தியர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் அதன் நிழல் தொடர்கிறது.
ஆனால் சாதி மனிதனோடு ஒட்டிப் பிறந்தது அல்ல. அது பிறகு உருவாக்கப்பட்ட வேத மரபின் ஒரு சமூக கட்டமைப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் சாதியின்றி வாழ்ந்திருக்கிறார்கள். அதுபோலவே எதிர்காலத்திலும் சாதியற்ற ஒரு சமூகம் உருவாகும்.
சாதி என்பது கற்பிதம். கற்பிதமாக உருவாக்கப்பட்ட எதுவும் ஒருநாள் அழிந்தே தீரும் — அதுவே அதன் இயல்பு. ஆனால் சாதியை உருவாக்கி மதம் படிநிலை சாதியை தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் நிலைப்பாடுகள், வடிவங்கள் இந்திய சமூகத்தை வெற்றி கொண்டு விட்டது. ஆனால் தமிழ் நாடு, கேரளம் போன்ற மாநிலங்களை வெற்றி கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு, கேரளம் போன்று இந்தியாவை மாற்ற வேண்டிய போராட்ட வாயில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல்.
இன்றைய மிகப் பெரிய ஆபத்து
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் நம் முன்னுள்ள மிகப் பெரிய சவால், வெறுப்பு அரசியலை மையமாகக் கொண்ட கூட்டணியை வீழ்த்துவது. வெறுப்பு அரசியல் மீண்டும் மீண்டும் தோற்கடிக்க அணி சேர்ந்துள்ள கூட்டணியை மேலும் பலப்படுத்துவது. ரசிக வாக்காளர்கள் இன்றைய நிலை என்ன என்பதை மதிப்பீடு செய்வது.
வெறுப்பு அரசியல், தேர்தல் அரசியலுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரானது. வெறுப்பு அரசியல் இந்த மண்ணில் பலிக்காது என்று புரிந்து கொள்ளும் வரை தோற்கடிக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் ஒரு முறை வெறுப்பு அரசியல் தேற்கடிக்க வேண்டிய நாள் வரும் ஏப்ரல் 23.
சக மனிதன், அண்டை அயலார் மீது வெறுப்பை விதைத்து, அதை ஒன்றையே அரசியல் மூலதனமாக்கும் சக்திகளை தோற்கடிக்க வேண்டிய நாள் ஏப்ரல் 23. நம் தேசம் பல்வேறு மதங்களின் தேசம். இது பெருமை சிறுமை அல்ல.
இங்கு ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எழுத்தறி குறைவாக இருந்தபோது வெறுப்பு அரசியல் வேலை செய்யவில்லை. வெறுப்பு அரசியலுக்கு மதம் பிடிக்க வில்லை. வெறுப்பை நம் மத்தியில் அரசியலாக விதைக்க முடியவில்லை.
கல்வியறிவு அதிகரிக்கும் போது வெறுப்பும் சேர்ந்து வளர்ந்து வருகிறதா? வெறுப்பை வளர்க்க கல்வி பயன்படுகிறதா?
இது ஒரு கவலைக்கிடமான சேதி. கல்வி முறையின் குறைபாட்டின் குறியீடு. ஆனால், அந்த வெறுப்பு அரசியலை தமிழ் மண்ணில் விதைக்க முடியவில்லை. தமிழ் மண்ணில் வெறுப்புக்கு எதிரான இந்த வீரியத்தை குறையச் செய்ய வெறி கொண்டு போராடுகிறார்கள் மநுதர்மவாதிகள். அதற்கு தேர்தலை ஓர் வலுவான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
அன்பை விதைத்து அரசியல் செய்த தமிழ் நாடு இது. தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு நீரோட்டங்கள் இருந்தது. இருந்தும் வருகிறது. ஆனால் எல்லாம் ஒரேயொரு செய்தியை சொன்ன அரசியல், அது பாரதி உச்சஸ்தாயியில் முழங்கிய “அன்பென்று கொட்டு முரசே” என்ற அரசியல். இந்த அரசியல் பாதை நெடியது. இன்று “வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுங்கள்” என்னும் படைக்கு தலைமை ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் அடக்கம். அந்தப் பட்டியல் வெகு நீளம்.
உயிரை வதைக்கும் வெறுப்பின் உச்சம்

இஸ்லாமிய சகோதரர்களை எங்கு பார்த்தாலும் மனம் பதைபதைக்கிறது. வகுப்புவாத சக்திகள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் நிலை என்ன? இஸ்லாமியர்கள், கிறுஸ்தவர்கள் நம் சகோதரர்கள் தானே! நம்மைப் போன்றே சகல உரிமைகளும் நிறைந்த இந்த நாட்டின் குடிமக்கள்தானே!
பெயர், தாடி, என தனது மத நம்பிக்கையே, மத அடையாளமே தங்கள் உயிரை விலைபேசும் காலம் ஒன்று வரும் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா? தனது மத நம்பிக்கையே, அல்லது அடையாளமே தனது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்று என்றேனும் அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? வட இந்தியாவில் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் இஸ்லாமியர் ஒருவர் பாதுகாப்பாக வீடு திரும்புவாரா என்பது நிச்சயம் இல்லையே!
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி உயிர் பறிப்பு, சித்திரவதை, கொலை. மாட்டுத் தோலை உரித்தார்கள் என்று கூறி உயிரோடு மனிதனின் தோலை உரித்தார்களே! மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாதவர்களை எப்படி அரசியல் களமாட அனுமதிப்பது? ஆட்சியாள எப்படி வாக்களிப்பது?
மாற்று மதத்தினர் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது

“உமர் காலித் என்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவன் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருக்கிறான். உச்ச நீதிமன்றம் கூட ஜாமீன் தர மறுக்கிறது. அவன் செய்த குற்றம் என்ன? அவன் பேசிய பேச்சு என்ன? அவனும் நானும் ஒரே விசயத்தை தான் பேசினோம். அவன் உள்ளே இருக்கிறான். நான் வெளியே இருக்கிறேன். காரணம் என்ன? அவன் இஸ்லாமியன். நான் இந்து. அவ்வளவு தான் “யார் கூறியது? புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா கூறியது”.
நியாயத்தை கேட்கும் இஸ்லாமிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
மறுபுறம், அதிகாரம் உள்ளவர்கள் பணத்தையும் அரசியல் சக்தியையும் பயன்படுத்தி ஆட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
வெறுப்பு
தேர்தல் அரசியலின் முக்கிய ஆயுதம் இன்றைய அரசியலில் வெறுப்பு. இது ஒரு திட்டமிட்ட ஆயுதமாக மாறியுள்ளது.
எங்கு என்ன நடந்தாலும் அதை மத அடிப்படையில் மாற்றி, பிரிவினையை உருவாக்கி, அதனை வாக்குகளாக மாற்றும் முயற்சிகள் தீவிரமாகின்றன.
மக்களின் மத நம்பிக்கைகள், கடவுள் பற்றிய உணர்வுகள், பழக்கவழக்கங்கள் — இவை அனைத்தும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு

பகுத்தறிவின் அரசியல் மரபு தமிழ்நாடு. இந்த வகையான அரசியலை எளிதாக ஏற்காத ஒரு தனித்துவமான மரபைக் கொண்டுள்ளது.
இந்த மரபை உருவாக்கியவர் தந்தை பெரியார். அவரே பார்பனீயம் மநுதர்மம் சனாதனம் என்று என்ன பெயரில் குறிப்பிட்டாலும் அது பாஜக என்னும் அரசியல் பிரிவின் சித்தாந்த வடிவம் என்று புரிந்து கொள்ள வைத்தவர். அப்படிப் புரிந்து கொள்ள வைக்க ஆளில்லாத நிலையில் தான் பாஜகவின் வஞ்சக வலையில் மாட்டிக் கொண்டார்கள் வட மாநிலத்தவர்.
சமத்துவத்தையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மரபை உருவாக்கினார் பெரியார்.
அதை அரசியல் மொழியாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா. அவரோடு இணைந்து செயல்பட்டவர்கள் மு. கருணாநிதி உள்ளிட்டோர். நாட்டின் இதர பகுதிகளில் வகுப்புவாதம் தற்போது உச்ச கட்டத்தில் நிற்கிறது.
இந்த நேரத்தில் இந்த சிந்தனை மரபை அசாத்திய துணிச்சலோடு தலைமை ஏற்று நிற்பவர் மு.க. ஸ்டாலின்.
பார்ப்பனியம்
ஒரு ஆதிக்க அமைப்பு, தனிநபர் அல்ல. தமிழ்நாட்டில் மக்கள் ஒரு முக்கியமான புரிதலைப் பெற்றுள்ளனர். ஊழல் மற்றும் வெறுப்பு முன்னுரிமை எது?
ஊழல் ஒரு முக்கிய பிரச்சனைதான். ஆனால் அது உலகம் முழுவதும் காணப்படும் ஒன்று. அதை எதிர்க்க ஜனநாயக நடைமுறைகள் உள்ளன; அது விவாதிக்கப்பட வேண்டிய தனி பிரிவு. ஆனால் வெறுப்பு அரசியல் — அது சமூகத்தையே உடைக்கும்.
மனிதர்களுக்கிடையேயான நம்பிக்கையை அழிக்கும்.
எனவே, வெறுப்பு அரசியலை முதன்மை எதிரியாகக் காண வேண்டிய அவசியம் உள்ளது.
ஒற்றுமையை உடைக்கும் முயற்சிகள்
தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.
இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
மத அடிப்படையில் பிரித்து, சமூகத்தை சிதைக்கும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளை நிர்மூலம் ஆக்கி உள்ளனர்.
நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.வெறுப்பு அரசியலை எப்படிக் கையாளப் போகிறோம்? என்ன வீச்சில் விரட்டி அடிக்கப் போகின்றோம் என்பதே!
மதம் என்னும் கோடாலி கொண்டு மனித இதயங்களை பிளக்கும் சக்திகளை முழு மூச்சில் முழுவதும் விரட்டி அடிக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும். அவற்றை நாம் விவாதிக்கலாம், தீர்க்கலாம்.
ஆனால் வெறுப்பு அரசியல் விளையும் மண்ணாக மாறிவிட்டால் உண்மையான ஜனநாயகத்திற்கு பொருளற்றுப் போய் விடும்.
கட்டுரையாளர் குறிப்பு

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
