டெல்லியில் 3 மாதங்களுக்கு தேசியப் பாதுகாப்பு சட்டத்தை (NSA) பயன்படுத்த டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 31 நாட்களாக ’காக்ரோச் ஜனதா கட்சி’யினர் அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி முற்றுகைப் பேரணியையும் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தினர். இந்தப் போராட்டத்தை போலீசார் கொடூரமான முறையில் ஒடுக்கினர்.
அதேநேரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் 3 மாதங்களுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதாவது ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை 3 மாத காலத்துக்கு தேசிய பாதுகாப்பு சட்டமான NSA-கீழ் கைது செய்யும் அதிகாரம், டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது
டெல்லியில் உக்கிரப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், “இது வழக்கமாக உள்துறை அமைச்சகத்தால் 3 மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்படுகிற நிர்வாக நடைமுறைதான்” என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை தமது எக்ஸ் பக்கத்தில், “ டெல்லி காவல்துறை ஆணையருக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் NSA-ன் கீழ் கைது செய்யும் அதிகாரம், காக்ரோச் ஜனதா கட்சியினரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த உத்தரவானது வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை NSA-ன் கீழ் அதிகாரங்களை நீட்டிக்கும் ஒரு நிர்வாக நடைமுறையே. காக்ரோச் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே ஜூலை 7-ந் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நிகழ்வுகளுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
