முதுகில் குத்திய துரோகி.. இனிமேல் திமுக கூட்டணியில் சேர்க்கவே கூடாது… காங்கிரஸை விளாசிய உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Mathi

DMK Congress Udhayanidhi Stalin

திமுக (DMK) கூட்டணியில் இனி காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்க்கவே கூடாது என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) காட்டமாக விமர்சித்தார்.

சென்னையில் இன்று மே 23-ந் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒரு மிக முக்கியமான காலகட்டத்திலே இந்த இளைஞரணி கூட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தல்ல யாருமே எதிர்பார்க்காத ஒரு எலெக்ஷன் ரிசல்ட் நமக்கு வந்திருக்கு. முதல்ல நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த அந்த எலெக்ஷன் ரிசல்ட், இன்னைக்கு நாளாக நாளாக, இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக அது ஒவ்வொரு நாளும் மாறிட்டு இருக்கு.

இந்தச் சூழல்ல, நம்முடைய தலைவர் அவர்கள், ரிசல்ட்டுக்கு அப்புறம் முதல்ல மாவட்டக் கழகச் செயலாளர்களை வரச்சொல்லி இதே அரங்கத்துல சந்திச்சாங்க. அதன் பிறகு உடனடியாக, “அடுத்து நம்முடைய இளைஞரணி தம்பிமார்களை எல்லாம் நான் சந்திக்கணும். நீ உடனே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணு” அப்படின்னு என்கிட்ட அறிவுறுத்துனாங்க. அந்த அடிப்படையில்தான் இன்னைக்கு இந்தக் கூட்டம் இங்கே இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

முதல்ல தேர்தல்ல வெற்றி வாய்ப்பை நாம இழந்ததுனால நீங்க எல்லாம் கொஞ்சம் அப்செட்டா நிச்சயமாக இருப்பீங்க. உங்களை எல்லாம் உற்சாகப்படுத்தணும் அப்படின்னுதான் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது, என்னுடைய கார்ல கிளம்பும்போது நான் நினைச்சிட்டு வந்தேன். ஆனா, இங்க வந்து பார்த்த பிறகுதான் தெரியுது, நீங்க எல்லாம் என்னையும் தலைவரையும் உற்சாகப்படுத்துவதற்காக இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க இருந்து கிளம்பி வந்திருக்கீங்க அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்.

திமுகவின் மரியாதை கூடிவிட்டது

இந்த தேர்தல் முடிவு இன்னைக்கு இந்த அரசியல் சூழல்ல பார்த்தீங்கன்னா, நாம தேர்தல் காலத்துல தோத்திருக்கலாம். ஆனா, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான மரியாதை இன்னைக்கு பல மடங்கு கூடியிருக்கு. இதை ஏன் நான் சொல்றேன்னா… தேர்தல் முடிஞ்ச உடனே, அதாவது எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை முடிஞ்ச உடனே, நாலாம் தேதி இரவு பார்த்தீங்கன்னா, நம்முடைய வெற்றி வாய்ப்பைப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் புக் பண்ணிட்டு இருந்தாங்க, ட்ரெயின்லயா இருக்கட்டும், பஸ்லயா இருக்கட்டும், பிளைட்லயா இருக்கட்டும், அதுக்கான ட்ரெயின் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இன்னைக்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சியும், பிற சட்டமன்ற உறுப்பினர்களும் அவங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருட்டுத்தனமாக போய் தங்குவதற்கு ரிசார்ட்ல ரூம் புக் பண்ணிட்டு இருந்தாங்க. இதுதான் திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்குமான அந்த வித்தியாசம்.

ADVERTISEMENT

அந்த அளவுக்கு அவங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் மேல அவங்களுடைய தலைமைக்கு நம்பிக்கை… அவங்களுடைய தலைமை மீது அவங்களுடைய எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை.

ரிசார்ட் அரசியல் செய்யாத இயக்கம்

இதை ஏன் நான் இன்னும் பெருமையோடு சொல்றேன்னா, தமிழ்நாட்டுல என்னைக்குமே, எப்பொழுதுமே ரிசார்ட் பாலிடிக்ஸ் செய்யாத ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் அப்படிங்கிற பெருமை நமக்கு மட்டும்தான் இருக்கு.

அதற்கு என்ன காரணம்? தலைமை மீது தொண்டர்களுக்கும், தொண்டர்கள் மீது நம்முடைய தலைவர் அவர்களுக்கும் இருக்கக்கூடிய அந்த பாண்டிங் (bonding)… அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருக்கிற வரைக்கும் நம்முடைய தலைவரையோ, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தையோ யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்… இப்படி எத்தனையோ பதவிகள் வரும், போகும். ஆனா, “திமுகவுல நான் ஒரு உறுப்பினர், கலைஞருடைய உடன்பிறப்பு, நம்முடைய தலைவருடைய தொண்டன், இளைஞரணியில நான் ஒரு உறுப்பினர், இளைஞரணியில நான் ஒரு நிர்வாகி” அப்படிங்கிற அந்த பெருமையும் கெத்தும் நமக்கு மட்டும்தான் என்னைக்குமே இருக்கும்.

நாம் பிறவிப் போராளிகள்

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்… நாம வெறும் தேர்தலுக்காக பணியாற்றக்கூடிய அரசியல்வாதிகள் கிடையாது; பிறவிப் போராளிகள்… வாரியர்ஸ் (Warriors). கலைஞருடைய உடன்பிறப்புகள், நம்முடைய தலைவருடைய தொண்டர்கள்.

நம்முடைய இளைஞரணியைப் பொறுத்தவரைக்கும், தலைவருடைய வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அப்போதிலிருந்து, கடந்த மூன்று வருடங்களாகவே களத்தில இறங்கி பல்வேறு பணிகளை நாம பெருமையா சொல்லலாம், நிச்சயம் செஞ்சிருக்கிறோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு நீங்க அத்தனை பேரும் கடுமையாக உழைச்சீங்க. நம்முடைய கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு பூத் (booth)லையும், ஒவ்வொரு தெருவுலயும், ஒவ்வொரு வீட்டுலயும் போய் வாக்கு சேகரிச்சீங்க. ராத்திரி பகல்னு பார்க்காம நீங்க அத்தனை பேரும் உழைச்சிருக்கீங்க. அதுக்கு முதல்ல உங்களுடைய சகோதரனா உங்களுக்கு முதல்ல என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கிறேன்.

குறிப்பா, நம்முடைய மாநிலத் துணைச் செயலாளர்கள், அனைத்து இளைஞரணி நிர்வாகிகள் தங்களுடைய வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு ஒரு மாசத்துக்கும் மேல தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த சட்டமன்றத் தொகுதிகள்ல போய் தங்கி, தேர்தல் வேலைகள் எல்லாம் பம்பரமாகச் சுழன்று செஞ்சாங்க. அதற்கும் இந்த நேரத்துல என்னுடைய பாராட்டுக்கள், என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவிச்சுக்கிறேன்.

இவ்வளவு உழைப்பையும் மீறி, நம்முடைய தலைவருடைய, நம்முடைய திராவிட மாடல் அரசுடைய திட்டங்களையெல்லாம் மீறி நாம எதிர்பார்க்காத ஒரு முடிவு இன்னைக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்காங்க.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஏற்கனவே நம்முடைய தலைவர் அவர்கள் மிகத் தெளிவாக சொல்லிட்டாங்க.

நம்ம கூட்டணி கட்சிகள் ஆதரவில் ஆட்சி

வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்துலதான் நாம இன்னைக்கு வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இப்ப ஆட்சி அமைச்சிருக்கக்கூடிய கட்சிக்கு மெஜாரிட்டியும் கிடைக்காம, நம்ம கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளுடைய ஆதரவாலதான் இன்னைக்கு இந்த ஆட்சி அமைஞ்சிருக்கு.

முதுகுல குத்திய காங்கிரஸ் (CONGRESS)

நம்ம கூட்டணியில் இருந்த சில கட்சிகள் நம்ம தலைவர்ட்ட வந்து, தலைவருடைய உத்தரவை பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தாங்க. ஆனா, 20 வருஷத்துக்கு மேல நம்முடைய முதுகு மேல ஏறி நின்னு, நம்ம மேல சவாரி செஞ்ச காங்கிரஸ் கட்சி… இன்னைக்கு நம்முடைய முதுகுல குத்திட்டு போயிருக்கு. இதை யாரும் மறந்துடாதீங்க.

பாஜக ஜெயிக்க காங்கிரஸ்தான் காரணம்

இந்தியாவுல பாஜகவின் வெற்றிக்கு, தொடர் வெற்றிக்கு நான் கூட மோடியும் அமித்ஷாவும் தான் காரணம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, அதுக்கு காரணம்… மெயின் காரணம் அவங்க கிடையாது. காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் அப்படிங்கிறது இப்ப தெரியுது.

ரத்தமும் வேர்வையும் சிந்தி…

அப்படிப்பட்ட அந்த காங்கிரஸையும் நம்முடைய தலைவர்தான் தோள்ள சுமந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல, சட்டமன்றத் தேர்தல்ல சுமந்துகிட்டு இருந்தோம். மதச்சார்பின்மையைப் பாதுகாக்கணும், பாஜகவை தமிழ்நாட்டுக்குள்ள விட்ரக் கூடாதுன்னு நம்முடைய தொண்டர்கள், நாம ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வச்சுக்கிட்டு இருந்தோம்.

காங்கிரஸ் ஜெயிக்க திமுககாரன் காரணம்

இந்தத் தேர்தலிலும் அதைத்தான் பண்ணோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்னைக்கு 5 இடத்துல ஜெயிக்க நம்முடைய உடன்பிறப்புகள், நம்முடைய தலைவருடைய தொண்டர்கள், திமுககாரன்தான் காரணம்.

இன்னைக்கு நம்ம தலைவர் அவர்கள் முதலமைச்சர் ஆகணும்னு மக்கள் போட்ட ஓட்டுல ஜெயிச்சிட்டு, பதவிக்காக சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டாங்க.

காங்கிரஸுடன் கூட்டணிவே கூடாது

குறைந்தபட்ச ஒரு நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரஸ இனி எந்தக் காலத்துலயும் நாம நம்பக் கூடாது. எந்தக் காலத்துலயும் நாம கிட்ட சேர்க்கக் கூடாது. அவங்களுக்கு சரியான பாடத்தை நாம கத்துக் கொடுக்கிறோமோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் மிக விரைவில் கத்துக் கொடுப்பாங்க.

இந்தச் சூழல்ல இளைஞரணி தம்பிமார்கள், சகோதரர்கள் நான் உங்ககிட்ட எல்லாம் கேட்டுக்கிறது எல்லாம்… நாம ஏற்கனவே செஞ்ச பணிகளை இன்னும் வேகமா செய்வோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

இவ்வளவு நாட்களா உழைப்பை அள்ளிக் கொடுத்த உங்களை நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் நிச்சயம் உங்களை கைவிடமாட்டார், கைவிடமாட்டார். நானும் எப்போதும் உங்க கூடத்தான் இருப்பேன். உங்களோடு தோளோடு தோள் நிற்பேன். உங்களாலதான் நானு.

வர்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞருடைய பிறந்தநாள். அதை மிகச் சிறப்பா நாம கொண்டாடணும். நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நடத்துங்க. யார் யாரெல்லாம் எவ்வளவு செய்ய முடியுமோ, பிரம்மாண்டமா இல்லாம அவங்களுடைய வசதி வாய்ப்புக்கு ஏத்த மாதிரி நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நடத்துங்க.

குடும்பமா கலந்து கொள்ளுங்கள்..

நீங்க நடத்துற நிகழ்ச்சியில மிக மிக முக்கியமா, யார் கலந்துக்குறாங்களோ இல்லையோ, உங்க குடும்பத்துல இருக்கிறவங்களை தயவு செய்து கலந்து கொள்ளச் சொல்லுங்க. உங்களுடைய மனைவி, உங்களுடைய சகோதரர்கள், உங்களுடைய மகன்கள், மகள்கள்… அவங்க தயவு செய்து அந்த நிகழ்ச்சியில கலந்துக்கணும்.

இன்னைக்கு நம்ம தலைவர்… இன்னைக்கு நாம ஆட்சியை விட்டு வந்திருக்கலாம், ஆனா இன்னைக்கும் நம்முடைய ஆட்சியுடைய சாதனைகள்தான் தொடர்ந்துட்டு இருக்கு. நம்ம தலைவருடைய ஆட்சியுடைய சாதனைகளுக்கு இன்னைக்கு இந்த சோபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு இருக்கு.

முதல்வர் அறையிலேயே ரீல்ஸ்

நான் சட்டமன்றத்துல பேசுனேன், நீங்க அத்தனை பேரும் பார்த்திருப்பீங்க… “இது வெறும் இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போடுற ஆட்சியா இல்லாம ஒரு ரியல் ஆட்சியை கொடுங்க”ன்னு நான் சொன்னேன். ஆனா இன்னைக்கு தலைமைச் செயலகத்துல முதலமைச்சருடைய அறையிலேயே ரீல்ஸ் எடுத்து போட்டுக்கிட்டு இருக்கானுங்க. அதுதான் இந்த ஆட்சியுடைய லட்சணம்.

இந்த ஆட்சி அமைஞ்சு இத்தனை நாள்ல, கொஞ்ச நாள்லயே இன்னைக்கு தமிழ்நாட்டுல ஏராளமான குற்றச் சம்பவங்கள் தினம் தினமும் நடந்துகிட்டு இருக்கு.

ஆன்லைன் மாஃபியா குரூப்

இந்தச் செய்திகளெல்லாம் மறைக்க, ஆளுங்கட்சியுடைய அந்த ஆன்லைன் மாஃபியா குரூப் தினமும் ஒரு பொய் செய்திகளைப் பரப்பிட்டு இருக்காங்க. ஆனா, இதையெல்லாம் நாம மட்டும் இல்ல, இன்னைக்கு பொதுமக்களும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, விரைவிலே கேள்வி கேட்க ஆரம்பிப்பாங்க. இந்த ஆட்சியுடைய உண்மை முகம் முழுசா தெரிஞ்சவுடனே, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நம்முடைய தலைவர்ட்ட வந்து நிப்பாங்க, நம்முடைய தலைவரைத் தேடி வருவாங்க. அந்த நாள் வெகு தூரத்துல இல்லை. தேர்தல் முடிவுக்கு நாம ஒருத்தர் மேல் ஒருத்தர் யாரும் பழி போடக் கூடாது, போட பழி போட வேண்டாம்.

தவறுகளை சரி செய்வோம்

ஆனா ஒன்று முக்கியம். இந்த முடிவுகள்ல இருந்து என்னத்தை, என்ன பாடத்தை நாம கத்துக்கிட்டு இருக்கிறோம்? எந்த இடத்துல நாம விட்டுட்டோம், எந்த இடத்துல நாம மிஸ் பண்ணிட்டோம், சரிக்கிட்டோம் அப்படிங்கிறதை நாம தெரிஞ்சுக்கணும். அதையெல்லாம் யோசிச்சு, சரி பார்த்து, கோர்ஸ் கரெக்ஷன் (course correction) பண்ணி, நம்ம அடுத்தடுத்த பணிகளை நாம வகுத்துக்கணும்.

கொரோனா, புயல், மழை, வெள்ளம் மாதிரியான பேரிடர் நேரத்துல நாம மக்களோட மக்களாகத்தான் எப்பவுமே நின்னுருக்கோம். இப்பவும் தமிழ்நாட்டுல ஒரு பேரிடர்தான் நடந்திருக்கு. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பு யார்கிட்ட இருக்கோ இல்லையோ, இளைஞரணி தம்பிமார்கள் உங்ககிட்ட இருக்கு.

வீட்டுக்குள்ள ஓட்டு கேட்கலை..

இந்தத் தேர்தல்ல சோசியல் மீடியா (social media) ஒரு முக்கியமான ரோல் (role) பிளே பண்ணியிருக்கு, நம்ம அங்கதான் மிஸ் பண்ணிட்டோம் அப்படிங்கிறது என்னுடைய எண்ணம். ஆனா அதே நேரத்துல, வெறும் சோசியல் மீடியா மீது பழி போட்டுட்டு, அதை காரணமாக சொல்லிட்டு நாம ஒதுங்கிடக் கூடாது. ஏன்னா எலெக்ஷன்ல நாம வெளிய எல்லார்கிட்டயும் ஓட்டு கேட்டோம், ஆனா வீட்டுக்குள்ள கேட்காம விட்டுட்டோமோ அப்படிங்கிற சந்தேகம் எனக்கு வந்திருக்கு.

நீங்க வெளியில உள்ளவங்களையெல்லாம் சந்திச்சு அரசியல் மயப்படுத்துறதுக்கு முன்னாடி, உங்க வீட்டுல, உங்க குடும்பத்துல உள்ளவங்களை, உறவினர்களை நீங்க முதல்ல அரசியல் மயப்படுத்துங்க. தினமும் அவங்ககிட்ட அரசியல் பேசுங்க; ஆனா அவங்களுக்குப் புரியிற மொழியில பேசுங்க.

Gen Z அரசியல்படுத்துங்க…

குடும்பத்தில் இருக்கக்கூடிய இளைய தலைமுறையை, நெக்ஸ்ட் ஜெனரேஷனை (next generation) அரசியல் படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. குறிப்பா ஜென்-சி (Gen Z) இளைஞர்கள்கிட்ட உண்மைகளை அவங்களுக்குப் புரியிற மொழியில எடுத்துச் சொல்லுங்க.

இன்னைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் எல்லாம் ரொம்ப ஃபாஸ்ட் (fast). ஒரு விஷயத்தை எவ்வளவு ஷார்ட்டா (short) சொல்றோமோ, அதை அவங்க அவ்வளவு ஷார்ப்பா (sharp) புரிஞ்சுக்குறாங்க. ஆகவே, அவங்ககிட்ட நம்முடைய ஹிஸ்டரி (history), நம்முடைய சாதனைகள், தியாகத்தை அவங்களுக்கெல்லாம் புரியிற மொழியில அவங்ககிட்ட சொல்லிக்கிட்டே இருப்போம்.

சோசியல் மீடியால நீங்க எல்லாரும் ஆக்டிவா (active) இருக்க வேண்டும். ஏதோ பேருக்கு சோசியல் மீடியால இருக்கோம், அக்கவுண்ட் (account) வச்சிருக்கிறோம் அப்படின்னு இல்லாம, நீங்களே கன்டென்ட்டை (content) உருவாக்குங்க. இந்த சோபா மாடல் அரசுடைய குறைகளை, நாம செஞ்ச சாதனைகளை எல்லாம் புள்ளி விவரத்தோட, ரொம்ப சிம்பிளா (simple) போஸ்ட் (post) பண்ணுங்க.

ஒவ்வொருத்தரும் இன்ஃப்ளூயன்சர்ஸ்

இன்ஃப்ளூயன்சர்ஸ் (influencers) மட்டும்தான் அதை பண்ண முடியும்னு நினைக்காம, நாம ஒவ்வொருத்தரும் இன்ஃப்ளூயன்சர்ஸா மாற வேண்டும். இந்த அரசுடைய ஃபேக் நெரேட்டிவ் (fake narrative), ஃபேக் புரோபகண்டாவை (fake propaganda) அம்பலப்படுத்துவோம்.

சமூக வலைதளங்களுக்கு நியமிக்கப்பட்ட துணை அமைப்பாளர்கள், அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டியது மிக மிக முக்கியம். இன்னும் சில மாவட்டங்கள்ல அந்தப் பணி நடைபெறாமல் இருக்கு. நாளை முதலோ அல்லது நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் மீண்டும் அந்தப் பணிகளைத் துவங்க இருக்கின்றோம்.

இன்னைக்கு தேர்தல் அரசியல்ல கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனா கொள்கை அரசியல்ல நாம ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம். இதுதான் கழகத்தினுடைய பலம்.

தமிழ்நாட்டின் எதிர்காலம்

தமிழ்நாட்டோடு அரசியல் எதிர்காலம் அறிவுத் தெளிவுள்ள, கொள்கை உறுதியுள்ள யங்ஸ்டர்ஸை (youngsters) நம்பி இருக்கு. அவங்களை நாமதான் தயார் செய்யணும். இந்தத் தேர்தலுடைய முடிவு இதோட கழகம் முடிஞ்சு போச்சு அப்படிலாம் கிடையாது, நமக்கு இனிமே புதுப்புது களங்கள் காத்திருக்கு.

அதற்கு நாம தயாராவோம். நம்முடைய தலைவர் வழியில நாம நிச்சயம் சிறப்பா செயல்படுவோம். எனக்குப் பிறகு தலைவர் அவர்கள் இங்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கின்றார்கள். எனவே, வந்திருந்த உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைச் சொல்லி, தலைவருடைய சொல் கேட்டு, அவருடைய கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு, இந்தச் சிறப்பான வாய்ப்பைக் கொடுத்த தலைவருக்கும், அனைத்து அமைப்பாளர்களுக்கும், துணை அமைப்பாளர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share