திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 23) மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் , எம்.பியும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இனி எப்போதும் காங்கிரசை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘இன்றைய சூழலுக்கு ஏற்ப இளைஞரணி சமூக வலைதளங்களில் வேலை செய்ய வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களே சொந்தமாக கன்டன்ட் கிரியேட் செய்யும் வகையில் இளைஞர் அணிக்கு ஒர்க் ஷாப் நடத்த உதயநிதிக்கு அறிவுறுத்துகிறேன்” என்று கூறினார்.
தமிழக வெற்றிக்கழக அரசு பற்றி பேசிய அவர், ‘இது சினிமா கவர்ச்சிக்கு விழுந்த ஓட்டே தவிர, அரசியல் எழுச்சிக்கானது அல்ல. இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது.
குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச நாளில் நம்மை தேடி வருவார்கள்.
நீங்கள் சோர்ந்து போகாமல் வேலையை பாருங்கள். நான் தோற்றதை நினைத்து கவலைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு கட்சியோட தோல்விதான் கவலையை தருகிறது. நமக்கு தனிநபரை விட இயக்கம் தான் முக்கியம். ஒருவேளை நான் தோற்று இயக்கம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட எனக்கு மகிழ்ச்சி தான்.
எனக்கு ஒரே ஒரு கவலை தான். திமுகவில் எந்த தலைவர் தலைமையிலும் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றதில்லை. அதை இந்த முறை மாற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். நீங்களும் உழைத்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் கவலையை தருகிறது’ என்று கூறியதாக திமுக இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.
