திமுக, அதிமுக என பிற கட்சிகளில் இருந்து விலகி சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான செல்வராஜ், தான் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், “கடந்த 1976-ம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். நகரச் செயலாளர், சேர்மன், மேயர் உள்ளிட்ட பொறுப்புகளை தாங்களும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் அளித்தீர்கள்.
2011ஆம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளராகவும் தற்போது வரையில் செயல்பட்டு வருகிறேன். 2021-ம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இருப்பினும் 2022-ம் ஆண்டு தொடக்கம் முதல் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட்டது எனக்குள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூரில் உள்ள முக்கிய தொழிலதிபர் தங்களிடம் வற்புறுத்தியதன் பெயரில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மாற்றுக் கட்சியிலிருந்து வந்து திருப்பூர் மேயராக இருந்த தினேஷ்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எனக்கு எந்த ஒரு முன் னறிவிப்பும் இன்றி நான் விருப்ப மனுவே அளிக்காத பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி எனக்கு வழங்கப்பட்டது. இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
என்னை தவிர வேறு யாராவது ஒரு திமுக விசுவாசிக்கு திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
தற்போதைய நிகழ்வுகளால் மிகுந்த மன வேதனையோடு திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று (மே 23) மீண்டும் அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மன கசப்புகளை தொடர்ந்து கடந்த 21.05.2026 அன்று நான் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து இருந்தேன்.
மேற்படி செயலுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியை அளிக்கிறேன் ஆகவே மீண்டும் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளராக பணியாற்றுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு விலகுவதாக அறிவித்துவிட்டு, தற்போது மீண்டும் கட்சி பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தது பற்றி முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜிடம் நாம் கேட்டபோது, “முதலில் நான் கடிதம் கொடுத்த பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்து பேசினார். அப்போது முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு போன் போட்டுக்கொடுத்தார். அப்போது தலைவர், எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். நீங்கள் கட்சிப்பணியில் தொடருங்கள் என்று ஆறுதலாக பேசினார். இதைத்தொடர்ந்தே மீண்டும் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளராக பணியாற்றுகிறேன் என்று அறிவித்தேன்” என கூறினார்.
