திமுக (DMK) இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு (Rahul Gandhi) எதிராக திடீரென முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இன்று மே 23-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், “முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம்” என்ற தலைப்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதில், “ கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது!
நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல்
ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த
புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.
தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
VIDEO:
திடீரென ஆவேச முழக்கம்
இதனிடையே இந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் திடீரென ராகுல் காந்திக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
