மகளிர் உரிமை தொகை… உதயநிதி சொன்ன குட் நியூஸ்!

Published On:

| By Selvam

விரைவில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வந்து அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி வந்தடைந்தார்.

ADVERTISEMENT

இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த திருமணம் சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோல் திருமணம் செய்வதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. 1967-ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபின்பு தான் பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமண முறைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினார். அதன்பிறகு தான் பலரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த பண்பாட்டு புரட்சி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், அண்ணாவும் கலைஞரும் தான். திமுக மட்டும் இல்லாமல் போயிருந்தால், தமிழர்கள் வீட்டு இல்ல திருமணத்தை தமிழில் நடத்த உரிமை கிடைக்காமல் போயிருக்கும்.

திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், கோவில் கருவறைக்குள்ளும் தமிழை கொண்டு வந்தது திமுக தான். தமிழ் மட்டுமல்ல, தமிழர்களையும் கருவறைக்குள் கொண்டு சென்றதும் திமுக தான். ஒருகாலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாது, பள்ளிக்கூடம் போக முடியாது, மேலாடை உடுத்த உரிமை கிடையாது, இந்த உரிமையெல்லாம் வாங்கி கொடுத்தவர் தான் பெரியார். சடங்கு, சம்பிரதாயம் போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகளை வேரோடு பிடுங்கி எறிந்தது திராவிட இயக்கமும் திமுகவும் தான்.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை வழங்கியவர் கலைஞர். நம்முடைய முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு தேவையான பல திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு முதல் 1.16 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. விரைவில் அதுவும் சரிசெய்யப்பட்டு, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.

இந்த நேரத்தில் மணமக்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் ரயில்வே 96 சதவிகிதம் மின்மயம்… டீசல் இன்ஜீன்கள் என்ன ஆகும்?

தூத்துக்குடியில் ஆய்வு… கனிமொழி பங்கேற்காதது ஏன்? – உதயநிதி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share