தமிழக வெற்றிக் கழகம்தான் (TVK) புதிய அண்ணா திமுக (AIADMK); ஆகையால் தவெகவில் இணையும் அதிமுகவினரை அன்புடன் வரவேற்கிறோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

பனையூரில் தவெக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று முறைப்படி தவெகவில் இணைந்தனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது: திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. தமிழகத்தில் முதல் முறையாக எங்களுடைய தலைவர் மாநாட்டில் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்று சொல்லும்பொழுது, அவர்கள் எள்ளி நகையாடினார்கள்.
“தேர்தல் முடிவு வரும் வரை கூட்டணிக்கு யாருமே வரவில்லை” என்று மு.க. ஸ்டாலினும் அவர் குடும்பமும் சிரித்தார்கள். ஆனால், வெற்றி பெற்று தமிழக மக்களுடைய பேராதரவுடன், எங்களுடைய தலைவர் மீது 35% நம்பிக்கை ஏற்பட்டு, 108 தொகுதிகளை தனிப்பெரும்பான்மையுடன் உருவாக்கிய பொழுது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிஜேபியுடனும் அதிமுகவுடனும் இணைந்து, மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சியை உருவாக்க முனைந்தார்.
கம்யூனிஸ்ட் தலைவர் எழுப்பிய கேள்வி
அதை கம்யூனிஸ்ட் தலைவராக இருக்கக்கூடிய பேபி, “தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், திமுகவும், அதிமுகவும், பிஜேபியும் சேர்ந்து இங்கு ஆட்சியை உருவாக்கும்” என்று பதிவு செய்தார். இதற்கு திமுக தலைவர் இதுவரைக்கும் பதில் அளிக்கவே இல்லை. இந்த முயற்சி செய்தார்களா, இல்லையா என்பதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால், அவர் கூட இருந்த எல்லா கூட்டணி கட்சிகளும் எங்களை அழைத்து பேசினாங்க; “இப்படி சேர்ந்தால் நல்லா இருக்குமா?” என்று கேட்டார்கள் என்பதை எல்லா தொலைக்காட்சிகளும் பதிவு செய்துவிட்டன.
திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல்
திமுக கொள்கை ரீதியாக மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தால்… அதிமுக பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய இபிஎஸ் அவர்களை தேர்தல் பிரச்சாரத்தில், “இபிஎஸ் பழனிசாமிக்கு ஓட்டு போட்டால் அது பிஜேபிக்கு போகும் ஓட்டு” என்று சொல்லி மு.க. ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதியும் ஏன் பிரச்சாரம் செய்தார்கள்?
அப்படியென்றால், சந்தர்ப்பவாத அரசியலை உருவாக்கியது, திட்டம் போட்டது, தமிழக வெற்றிக் கழகமும் எங்களுடைய தலைவரும் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சதி செயலை செய்தது திமுக தான். அந்த சதி செயலை முறியடித்து, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்தோம். ஜனநாயகத்தில் நாங்கள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஒளிவு மறைவு அரசியல் எங்களுக்கு கிடையாது; திமுக தான் ஒளிவு மறைவு அரசியலை செய்தது.
அதிமுகவின் வீழ்ச்சியும் தொண்டர்களின் குமுறலும்
அதிமுகவின் சி.வி. சண்முகத்தின் அணிகள் ஏன் வெளியே வந்தார்கள்? அவர்களுடைய கோரிக்கை என்ன? புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. தீய சக்தி குடும்பத்திடம் ஊழலால் சிக்கிக்கொண்டது என்று சொல்லி, கட்சியை 1972-இல் உருவாக்கி, அவர் இறக்கும் வரை திமுகவை ஜெயிக்கவே முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய உறுதியான தலைவராக இருந்தார்.
அதன் பின் குழப்பங்கள் ஏற்பட்டு, திரும்பவும் 1991-இல் அம்மா ஜெயலலிதா வந்து, அவர் இருக்கும் வரையும் அதிமுகவை மிகப்பெரிய வலிமையான சக்தியாக மாற்றினார். 2016-இல் தனிப்பெரும் சக்தியாக, கூட்டணியே இல்லாமல் வென்று காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா.
இபிஎஸ் மீதான அதிருப்தி
அந்த வழியில் வந்த தொண்டர்கள், இபிஎஸ் தலைமையிலான கூட்டணியின் தோல்வி ஆகட்டும், திமுகவுடனான மறைமுக உறவை புரிந்துகொண்டு… தேர்தல் முடிந்த உடனே அதிமுக பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய இபிஎஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “முதலமைச்சர் ஆகலாம்” என்று சொல்லும்பொழுது, அந்த கட்சியில் மேடம் ஜெயலலிதாவிற்கு பல்வேறு இழப்புகளுக்கு காரணமாக இருந்தது திமுக தான் என்பது ஒவ்வொரு தொண்டருடைய மிகப்பெரிய நம்பிக்கை.
வாழ்நாள் முழுவதும் புரட்சித்தலைவி அம்மாவும், எம்ஜிஆரும் எதிர்த்த ஒரு கட்சியுடன், தான் முதலமைச்சர் ஆவதற்காக இபிஎஸ் பழனிசாமி பேச்சுவார்த்தையை நடத்தினார். அதை கம்யூனிஸ்ட் தோழர்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்து நின்றதால் தான் அந்த பேச்சுவார்த்தை நின்றது.
தவெகவின் தூய்மையான 15 நாள் ஆட்சி
இது ஏதோ திமுக முழு மனதுடன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்—”நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம்” என்று ஒரு அறிக்கை கொடுத்தாரே, அது கிடையாது. எல்லா விதமான முயற்சிகளும் நடந்து, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் தோழர்கள் இணைந்ததால் அது தோல்வியடைந்தது. அது தோல்வியடைந்ததால் தான், மு.க. ஸ்டாலின் அந்த அறிக்கையை விட்டு, மக்களிடம் ஒரு நல்ல பெயர் வாங்குவதற்காக மீண்டும் ஒரு சூழ்ச்சியை உருவாக்கினார்.
அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். “அம்மா உருவாக்கிய இயக்கம் இன்றைக்கு திமுகவோடு சேர்ந்து சுயநல அரசியலில், சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு இருக்கிறது; தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் புதிய அதிமுகவாகப் பார்க்கிறோம்; அதனால் இணைகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் வரக்கூடிய காலங்களில் முன்னாள் 19 அமைச்சர்கள், 20 அமைச்சர்கள், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர், அன்புடன் எங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால், ’26 தேர்தலுக்கு அப்புறம் அரசியல் களம் மாறிவிட்டது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; வரக்கூடிய தேர்தல்களில் இபிஎஸ்ஸும், மு.க. ஸ்டாலினும் இணைந்து தேர்தல் அரசியலை உருவாக்குவார்கள். அவர்களுக்கு ஊழலைத் தவிர எதுவும் கிடையாது.
இந்த ஒரு வாரமாக, இந்த 10 நாட்களாக டிடிசிபி, சிஎம்டிஏ, டாஸ்மாக், பதிவுத் துறை என எங்குமே ஊழல் கிடையாது. சிஎம் பேமிலி ஃபண்ட், அமைச்சர் ஃபண்ட், எம்எல்ஏ ஃபண்ட், பார்ட்டி ஃபண்ட்… எல்லாவற்றையும் ஒழித்தது எங்களுடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தான். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் ஊடகங்களில் சரிபார்க்கலாம். அப்படி ஒரு தூய்மையான ஆட்சியை கொடுக்கும் பொழுது, அதற்காகப் பாதிக்கப்பட்டவர்கள் மு.க. ஸ்டாலினும், இபிஎஸ் பழனிசாமியும் தான்.
தவெகவில் இணையும் அதிமுகவினர்
புரட்சித்தலைவி அம்மாவின் கனவையும் மீறி, திமுகவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் ஆவதற்குச் சூழ்ச்சி செய்யும் பொழுது, அதிமுகவில் இருக்கக்கூடிய எல்லா தொண்டர்களும், தலைவர்களும் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதற்குப் பதிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கி, இந்த 15 நாளுடைய ஆட்சியில் ஒட்டுமொத்த ஊழலையும் தூக்கி எறிந்த சரித்திரம் இந்த 50 வருடங்களில் எங்குமே நடந்தது கிடையாது.
அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு என்னைச் சந்தித்தார்கள். சந்தித்த பிறகு முதலமைச்சரை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தார்கள். இப்பொழுது சபாநாயகர் அறிவித்த பிறகு, இன்று முறையாக அதனுடைய உறுப்பினர் அட்டையை பொதுச்செயலாளர் ஆனந்தன் முன்பு வாங்கி முறையாகச் சேர்ந்திருக்கிறார்கள். இங்கு ஜனநாயகம் எங்கும் மீறப்படவில்லை.
திமுகவின் தோல்விக்கான காரணம்
மு.க. ஸ்டாலினின் தோல்வி குறித்து நான் அவரிடம் பதிவு செய்கிறேன், “எதனால் தோற்றோம்” என்று ஆராய 36 கமிட்டிகளைப் போட்டிருக்கிறார்கள். அவருடைய மிகப்பெரிய தோல்விக்கு அவருடைய மருமகன் சபரீசனும், அவருடைய மகன் உதயநிதியும் தான் காரணம். அவர்கள் துறைகளைப் பிரித்து, எல்லா துறைகளிலும் ஊழலை உருவாக்கி, ஒட்டுமொத்த பணத்தையும் வசூல் செய்திருக்கிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறை, பிடபிள்யூடி, பதிவுத் துறை என ஊழல் செய்து, அந்த ஊழல் மூலம் பணத்தை ஒவ்வொரு தொகுதியிலும் 30 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அதனால் மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தார்கள்.
இந்த வெற்றி சாதிக்கு எதிரான ஒரு வெற்றி இல்லை; சாதியைப் புறக்கணித்து மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மதத்தைப் புறக்கணித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், பணத்தைத் தூக்கியெறிந்திருக்கிறார்கள், பழமையான அரசியலைத் தூக்கியெறிந்திருக்கிறார்கள். அதனால் இந்த பொய் மற்றும் சூழ்ச்சியான பரப்புரைகளுக்கெல்லாம் கடுமையாக நாங்கள் மக்கள் முன்பு நின்று பதில் அளிப்போம்.
முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிட்டு வந்து மு.க. ஸ்டாலின் முன்பு வந்து சேரும் பொழுதோ, வைத்திலிங்கம் சேரும் போதோ, அவர் என்ன குதிரை பேரம் நடத்தினார் என்று வெளிப்படுத்தட்டும். அந்த மாதிரி எந்தக் கட்சியிலிருந்தும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டு ஒரு கட்சியில் சேரலாம்.
மு.க. ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் நாங்கள் பதிவு பண்ணுவது என்னவென்றால், இடைத்தேர்தல் வரும். இடைத்தேர்தலில் நீங்களும் பிரச்சாரம் செய்யுங்கள். பிரச்சாரம் செய்வது ஜனநாயக கடமை தான். தேர்தலில் மக்கள் யாருக்கு வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை முடிவு பண்ணப்போகிறார்கள். நாங்கள் எங்களுடைய பிரச்சாரத் திட்டத்தின் மூலமாகவும், எங்களுடைய தலைவருடைய பிரச்சாரம் மூலமும் மிகப்பெரிய வெற்றிகளை உருவாக்குவோம்.
எம்ஜிஆர் தொண்டர்களுக்கு வரவேற்பு
புதுசாக உருவாக்கக்கூடிய, இளைஞர்கள் கொண்ட, தலைவர் உருவாக்கிய கட்சியில் ஒளிவு மறைவு அரசியல் கிடையாது. மிக்க நேர்மையுடன், அதிமுக தலைமை திமுகவின் தலைமையுடன் சேர்ந்து ஒரு சூழ்ச்சி அரசியலை தமிழ்நாட்டில் உருவாக்கியதன் வெளிப்பாடுதான் அதிமுகவின் ஒட்டுமொத்த தோல்வி. அந்தத் தோல்வியின் வெளிப்பாடுதான் அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் மேல் நம்பிக்கை இழந்து, ஒரு மாற்றத்திற்கான, மக்கள் சேவைக்கான ஒரு அரசியலுக்காக இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை அன்போடு வரவேற்போம்.
இவர்களை மட்டும் இல்லை, ஒட்டுமொத்த அதிமுகவின் நிர்வாகிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் நாடாளுமன்ற, மாவட்ட செயலாளர், ஒன்றியம், ஏன் கிளைக்கழக நிர்வாகிகளைக் கூட நாங்கள் வரவேற்போம். ஏனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி… நாங்கள் அப்பொழுதே பதிவு செய்தோம் எங்களது பிரச்சாரத்தில். எம்ஜிஆர் அவர்களையும் அண்ணா அவர்களையும் தலைவர் முன்னிலைப்படுத்தினார். ஏனால் எம்ஜிஆர் எங்களுக்கும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுக்கும் சரி, முக்கியமான ஒரு தலைவர். அதனால் அதிமுக தொண்டர்கள் எங்களுக்குத் தோழமை; பொதுச்செயலாளர்கள் மீது தான் எங்களுக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. அதனால் தொண்டர்களை நாங்கள் எப்பொழுதும் வரவேற்போம்.
கேள்வி: “மாற்றத்திற்கான அரசியல் என்றுதான் தவெக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. ஆனால் அதிமுகவில் இருக்கும் பல நிர்வாகிகள் தொடர்ந்து இங்கு வந்து இணையும் பொழுது அது எப்படி மறுபடியும் அதே மாதிரியான திராவிட கட்சி உள்ளே வருவதுதானே ஆகிறது? இது எப்படி…?”
பதில்: இல்லை, இது மாற்றத்திற்கான கட்சிதான். ஆனால் வந்து சேருபவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் கிடையாது. செங்கோட்டையன் அதிமுகவிலிருந்துதான் வந்தார். அவர் தன்னுடைய எம்எல்ஏ பதவியை டிசம்பர் மாதமே ராஜினாமா செய்துவிட்டு வந்து கட்சியில் சேர்ந்தார். அவருக்கான பணிகள் கொடுக்கும் பொழுது, இந்தக் கட்சியினுடைய சட்டதிட்டங்கள், அடிப்படை விதிகளை அவர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதில் முக்கியமானது ‘ஊழலற்றது’ என்று சொல்வதும், எங்களுடைய கொள்கைகளை உள்வாங்கிச் சேருபவர்களில் யார் மீதும் எந்த விமர்சனமும் இல்லாதவர்களை மட்டும்தான் கட்சியில் ஆராய்ந்து இணைக்கிறோம். தலைவர் அவர்களுடைய முழு கட்டளையோடுதான் அவர்கள் வந்து சேர்கிறார்கள்.
முக்கியமாக எங்களுடைய தலைவர் முதலமைச்சர் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு மாற்றத்தை உருவாக்குவார் என்று அவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கும் பல்வேறு அழுத்தங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பாக அவர்கள் பாண்டிச்சேரி கூட்டத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிவு செய்திருக்கிறார்—”நாம் திமுகவோடு சேர்ந்து முதலமைச்சர் ஆனால் என்ன?” என்று கோரிக்கை கேட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியிலிருந்தே அவர்களால் மீள முடியவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இது.
அதிமுகவின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும், எம்ஜிஆர் அவர்களுடைய குறிக்கோளுக்கும் கொள்கைக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. இது இயற்கையாகவே தமிழக வெற்றிக் கழகத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் நாங்கள் உடனடியாக, அந்த விதிமுறைப்படி கட்சியில் அவர்களைச் சேர்த்த பிறகு, என்ன விமர்சனம் வந்ததோ, இன்று ஒளிவு மறைவில்லாமல் பத்திரிகையாளரைச் சந்தித்துப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு வரக்கூடியவர்கள் எல்லாரும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
“புரட்சி தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, நாளைக்கு திமுகவுடன் சேரப்போகிறது, சேர்ந்து தேர்தல் அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று ஒவ்வொரு எம்எல்ஏவும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்த கட்சியின் உள்வட்டக் கூட்டத்தில் இபிஎஸ் பழனிசாமி பேசியதை, அந்த 47 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் எங்களிடம் பதிவு செய்திருக்கிறார்கள். இது புதிய அதிமுக. தவெகவை அப்படித்தான் பார்க்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
அப்பொழுது, அந்த அதிர்ச்சியிலிருந்து பல்வேறு எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் அன்புடன் இணைய வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் சட்டத்தின்படி, சபாநாயகரைச் சந்தித்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய எல்லாவிதமான அரசியல் அதிகாரமும் இருக்கிறது.
தலைவர் அவர்கள் யாருக்கு வாய்ப்பு கொடுக்கிறாரோ, அதைப்பற்றிய அறிவிப்பை கூடிய சீக்கிரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். தற்போது இருக்கும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர மற்றவர்கள் வருவார்களா என்பது அந்தந்த தனிநபர்களின் முடிவைப் பொறுத்தது. அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் போதுதான் அது தெரியவரும்.
தவெக வெல்ல அதிமுக தொண்டர்களின் பங்களிப்பு
அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் இயற்கையாகவே தவெக-வோடு இணைந்து தேர்தல்களில் வேலை பார்த்திருக்கிறார்கள். திமுக வரக்கூடாது, ஜெயிக்கக் கூடாது என்ற நோக்கில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, குறிப்பாக வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் தவெக தொண்டர்களோடு அதிமுக தொண்டர்களும் இணைந்து களப்பணியாற்றியதால் தான் இந்த மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது.
தலைமைச் செயலக சந்திப்பு குறித்த விளக்கம்
தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, முன்னாள் எம்.எல்.ஏ என்ற முறையில் அவர் ஒரு அமைச்சரைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஓபிஎஸ் தரப்பிலிருந்து தமிழ்ச்செல்வன் சந்தித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
தலைமைச் செயலகத்தில் முதலில் சபாநாயகரைச் சந்தித்து தங்களுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர். அதன் பிறகு புரோட்டோகால் படி அமைச்சரையும், முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் முடிந்த பிறகு, மாலை 7:30 மணிக்குத்தான் அவர்கள் முறைப்படி கட்சி அலுவலகத்தில் வந்து தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விஷயத்தில் மக்கள் மன்றத்தில் முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம்.
கட்சித் தாவல் குற்றச்சாட்டுக்கான மறுப்பு
இது கட்சித் தாவல் கிடையாது; தார்மீக அடிப்படையில் அன்போடு கட்சியில் இணைவது ஆகும். உண்மையான கட்சித் தாவல் என்பது இபிஎஸ், பன்னீர்செல்வம் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சேர்ந்ததுதான். ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் இணைந்ததற்கு முதலமைச்சர் பதில் சொல்வாரா?
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ எதிர்த்துச் சட்டமன்றத்தில் தனி அணியாக நின்றபோதே அவரை முறைப்படி டிஸ்மிஸ் செய்து இடைத்தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சபாநாயகர் அப்பாவு அவர்கள் அந்த அணியை ஊக்குவிக்கும் விதமாகவே செயல்பட்டார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அணியினர் முதலமைச்சரையும் அவர் மகனையும் புகழ்ந்து பேச சபாநாயகர் அனுமதித்தார். சட்டமன்றத்தை தற்போதைய முதலமைச்சர் தனக்கான புகழுரைக் கூடாரமாகவே பயன்படுத்திக் கொண்டார்.
ஆனால் தவெக நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறது. ஐந்து வருட எம்.எல்.ஏ பதவியைத் துறந்து, தற்போதைய தலைமையின் மீது நம்பிக்கை இழந்து வருபவர்களை வரவேற்கிறது. அவர்கள் சபாநாயகரைச் சந்தித்து முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கத் தயாரான பிறகே கட்சியில் இணைகிறார்கள். எனவே, இது ஆன்டி-டிஃபெக்ஷன் லா (Anti-defection law) வரம்பிற்குள் வராது. மக்கள் மன்றத்தில் எங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
போலி உறுப்பினர் அட்டை சர்ச்சை
புதிதாக இணைந்தவர்களுக்கு ஏற்கனவே உறுப்பினர் அட்டை இருந்தது போல வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை (Fake). எங்களது கட்சியைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமாகத் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். இந்த உறுப்பினர் அட்டை விவகாரத்தை யாரோ திட்டமிட்டு போலியாகப் பரப்புகிறார்கள்; இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் திமுக-வினர் திட்டமிட்டுச் செய்யும் எதிர்மறைப் பிரச்சாரங்கள் (Negative campaign) ஆகும். இதுவரை நீதிமன்றத்தில் இது தொடர்பாக எந்தவொரு குற்றப்பத்திரிகையோ (Charge sheet), சட்டப்படியான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.
திமுகவினர் பதிவுத்துறை, சிஎம்டிஏ, டாஸ்மாக் போன்ற துறைகளில் ஊழலில் ஈடுபட்டது போல, தவெக தரப்பில் யாரும் எந்தவிதமான முறையற்ற வசூலிலும் ஈடுபடவில்லை. இந்த ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள். கடந்த 50 வருடங்களாகச் செய்ய முடியாத ஊழல் ஒழிப்பை அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம். சிஎம்டிஏ மற்றும் பதிவுத்துறையில் முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதை ஒழித்திருக்கிறோம்.
தற்போது சிஎம் பேமிலி ஃபண்ட், சிஎம் ஃபண்ட், மினிஸ்டர் ஃபண்ட், எம்.எல்.ஏ ஃபண்ட் போன்றவற்றை ஒழித்துக் கட்டியிருக்கிறோம். அதிகார மட்டத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளையும் முதலமைச்சர் மிக நுட்பமாகக் கவனித்து வருகிறார். விரைவில் இதற்கான உறுதியான மாற்றம் உருவாகும்.
