கோவை சிறுமி வழக்கு: வைரலான ஐஜி ரம்யா பாரதியின் வீடியோ.. சமூக வலை தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

Ramya bharathi

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி காணாமல் போன 10 வயது சிறுமி, மறுநாள் (மே 22) மாலை படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்தக் கொடூர சம்பவம் குறித்து கடந்த மே 23-ஆம் தேதி கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பாக, ஐஜி ரம்யா பாரதி சக காவல்துறை அதிகாரிகளுடன் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

ஒரு குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்த பிரஸ் மீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் இப்படி தங்களது பொறுப்பற்ற முறையில் சிரித்துக் கொண்டிருப்பதா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ஆளும் தவெக ஆதரவாளர்கள் சிலர் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர். இருப்பினும் செய்தியாளர் சந்திப்பை பதிவு செய்த பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து ஐஜி ரம்யா பாரதிக்கு கண்டனங்கள் குவிகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share