அதிமுகவின் (AIADMK) 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) சேர்ந்துள்ளதற்கு முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிமுகவில் எஸ்பி வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள், மே 13-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில் இந்த 25 பேரில் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இந்த 3 பேருக்கும் தலைமை செயலகத்திலேயே தவெகவின் உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விசிக கடும் எதிர்ப்பு
இதேபோல முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “ 3 எம்.எல்.ஏ.க்களின் செயல் அறமற்ற செயல். இந்த 3 பேரையும் அரவணைப்பது என்பது மிகவும் ஆபத்தானது. நேர்மையான அரசியல் செய்வோம் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு சந்தேகத்துக்கே இடமில்லாத அச்சுறுத்தலுக்குரிய நடவடிக்கை இது” என விமர்சித்துள்ளார்.
