சினிமா துறையினருக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி! தியேட்டர் விதிகளில் வரும் அதிரடி திருத்தம்

By Pandeeswari Gurusamy

|

Published on 25 May 2026, 6:32 PM

Vijay

புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட முதல்வர் ஜோசப் விஜய் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (மே25) வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,”தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

ADVERTISEMENT

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர். தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும். உள்ளூர் பண்டிகை நாட்கள். பொது விடுமுறை நாட்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel