பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் உத்தரவு – யார் யாருக்கு எவ்வளவு?

Published On:

| By Kavi

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில்,  5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக அரசு  இன்று (மே 25)  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ தமிழ்நாடு முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்  ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ். நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,

ADVERTISEMENT

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய  முதல்வர் விஜய் உத்தரவிட்டார். 

ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு  முழுவதுமாக (100%) கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் சிறு விவசாயிகளுக்கு, அவர்களின் கடன் தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share