அதிமுக-வை விட்டு விலகி தவெக-வில் இணைந்தது ஏன்? – பனையூரில் மரகதம் குமரவேல் பேட்டி!

Published On:

| By Kavi

தொகுதி மக்களின் நலனுக்காக எங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக  தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார். 

அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று தவெகவில் இணைந்தனர். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து  பனையூரில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய மரகதம் குமரவேல்,  “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். நாங்கள் எதற்குப் பதவி விலகினோம் என்ற காரணத்தை இந்த நேரத்தில் மக்களிடத்தில் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறோம். 

ADVERTISEMENT

தேர்தல் முடிவு மே 4ஆம் தேதி வந்த பிறகு, 7ம் தேதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்தது. 

தலைமைக்குழு நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்து இரண்டு நிலைப்பாடுகளை எடுத்தார்கள். ஒன்று, திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது; இன்னொன்று, தவெகவுடன் ஆதரவு கொடுத்து ஆளுங்கட்சி போல் நம்முடைய தொகுதியில் மக்கள் பணியாற்ற முடியும், மக்களுடைய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இரண்டு நிலைப்பாட்டை எடுத்தார்கள். 

ADVERTISEMENT

எங்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு விருப்பமில்லை. அங்கு இருக்கின்ற பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மனதிலும் இது ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.  நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம். 

சி.வி. சண்முகம்  தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டோம்.  நாங்கள் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தோமே தவிர, கட்சியில் இருந்து விலகிப் போகவில்லை, அதிமுகவில் இருந்துதான் ஆதரவு கொடுத்தோம். ஆனால், அன்றைய தினத்திலிருந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாகப் பல்வேறு விமர்சனங்களை வைத்தார்கள். 

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 54 ஆண்டுகாலமாக வீறுநடை போடும் மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்கின்ற வகையில் திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு எங்கள் மனம் விரும்பவில்லை. 

ஏற்கனவே கடந்த 2021ல் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நானும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமாரும் எதிர்க்கட்சியாக இருந்தோம். அதன் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். 

கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தும் எங்களால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. அதிகார அளவில் திமுக ஆட்சியில் இருந்தார்கள். நாங்கள் சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் ஒரு 10% கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. 

இந்த முறையும் எங்களால் எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘கடந்த முறையும் நீங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த முறையாவது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று மதுராந்தகம் தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்தார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துதான் இந்த முடிவை எடுத்தோம். 

இது எங்களின் தனிப்பட்ட நிலைப்பாடு. சுயநலத்திற்காக எடுக்கவில்லை. சுயமரியாதைக்காகவும், தொகுதி மக்களின் நலனுக்காகவும் எடுத்த முடிவு. 

அதேபோல இன்று பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்துவிட்டு, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம். 

அதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவல் கொண்டுவரப்பட்ட ‘அம்மா உணவகத்தை’ கடந்த திமுக ஆட்சியில் வந்தவுடனே மூடிவிட்டார்கள். ஏழை எளிய மக்கள் வயிறார சாப்பிடும் திட்டத்தைத் தாய் உள்ளமில்லாமல் நிறுத்தினார்கள் . 

ஆனால், நம்முடைய முதல்வர் பதவியேற்ற அன்றே அம்மா உணவகத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இதையெல்லாம் நாங்கள் உணர்வுப்பூர்வமாக வரவேற்கிறோம். 

அவர் பதவியேற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் நல்ல ஆட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார். 

மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, இதுகுறித்து  தலைமை முடிவு செய்யும் என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share