விசில் சின்னத்துக்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் தேர்தல் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது.
அதில் வாக்காளர்கள் வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி, விசில் சின்னத்துக்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் விசில் சின்னத்துக்கு வாக்களித்த சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோவை சக்திவேல் தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்ததை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், அவர் வீடியோ எடுத்ததை உறுதி செய்த பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் கந்தலி போலீசார் சக்திவேலை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்துள்ளனர்.
கந்திலி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குனிச்சி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் அதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
