குதிரை பேரம் விவகாரத்தில் கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கக் வேண்டுமென சிலர் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பண ஆசை காட்டி ‘குதிரை பேரம்’ பேசியதாக புகார் அளித்தார். இதுபோல் தவெகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் சின்ன ஆண்டாண் கோவில் சாலையில் உள்ள பாரி நகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று இரவு கரூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனைக்கு பின்னர் போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்து சென்றனர்.
போலீசாரின் சோதனையில் குதிரை பேரம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அலுவலகத்தை சீல் வைத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
