குடியுரிமை.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ‘குட்டு’!

Published On:

| By Mathi

ECI Not The Authority To Determine Citizenship: Supreme Court

நாட்டின் குடிமக்களின் குடியுரிமையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தீர்மானித்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்” (Special Intensive Revision of Electoral Rolls) போது, பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்தும், பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது தரப்பு நியாயத்தை முன்வைக்க உருவாக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் விசாரணை முறையை விரைவுபடுத்தவும், சீரமைக்கவும் கோரி பிரசஞ்சித் போஸ் என்பவர் பொதுநலன் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

மேலும் அதில்,

  • மனுதாரர்கள் நேரடியாகத் தீர்ப்பாயத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, காணொளி காட்சி (Video Conferencing) மூலம் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்
  • விசாரணை குறித்த அறிவிப்புகளை மின்னணு முறையிலும் மற்றும் Booth Level Officers (BLO) மூலம் நேரிடையாகவும், விசாரணைக்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும்.
  • தீர்ப்பாயங்களிலிருந்து விலகிய நீதிபதிகளுக்குப் பதிலாகப் புதிய நியமனங்களை மேற்கொண்டு பணியைத் துரிதப்படுத்த வேண்டும்
  • மேல்முறையீட்டு நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களைப் பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எளிய முறையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்
  • வெளிப்படைத்தன்மை: தொகுதிகள் வாரியான தரவுகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று ஜூலை 17-ந் தேதி விசாரித்தது.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதங்கள்:

  • மேற்கு வங்காளத்தில் உள்ள 19 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் சுமார் 34 லட்சம் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
  • 19 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் இருந்து இரண்டு நீதிபதிகள் பதவி விலகியுள்ளனர்
  • இதுவரை சுமார் 38,000 வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன. அதில் 70% மேல்முறையீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன அதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டது தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் மற்றும் பிற அரசு நலத்திட்டங்கள் (Annapurna Yojana), சாதிச் சான்றிதழ்கள் ஆகியவை மறுக்கப்படுகின்றன.
  • ஒருவரிடம் கடவுச்சீட்டு (Passport) இருந்தால், அது குடியுரிமைக்குச் சான்றாக இருக்க வேண்டும்.

இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்த முக்கிய கருத்துகள்:

ADVERTISEMENT
  • தேர்தல் ஆணையம் குடியுரிமையை தீர்மானிக்கும் அமைப்பு அல்ல.
  • வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் போது, ஒருவரைச் சேர்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவது தானாகவே ஒருவரின் குடியுரிமையைப் பறிக்காது
  • ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதில் சந்தேகம் இருந்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்கக் கோர வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கடமை
  • SIR தரவுகளைத் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அரசின் பிற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அல்லது தகுதியைத் தீர்மானிப்பதில் பயன்படுத்தக் கூடாது என மே 27-ந் தேதி தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share