தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாக்களிக்க மக்கள் சொந்த ஊர்களுக்கு திரண்டு வருவதால், மாநிலத்தின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடும் விஜய், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் நீட்டிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பயண சிக்கல்கள் காரணமாக பல வாக்காளர்கள் தாமதமாக வாக்குச்சாவடிகளுக்கு வருகின்றனர் என்றும், நீண்ட வரிசைகளால் வாக்காளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
