அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 23) தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது வாக்கைப் பதிவு செய்தார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என தெரிவித்தார்.
அதேபோல், சென்னை நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் காரைக்குடி வேட்பாளருமான சீமான் தனது மனைவியுடன் சென்று வாக்குப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயக நாட்டின் கடைசிக் கருவி வாக்கு தான். அதனை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம். ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் உண்டு. அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதே வாக்குச்சாவடிக்கு நான் மருத்துவக் கல்லூரி மாணவியாகவும், அரசியல்வாதியாகவும், பாஜக மாநிலத் தலைவராகவும், ஆளுநராகவும், தற்போது வேட்பாளராகவும் வந்துள்ளேன். இதுவே ஜனநாயகத்தின் சிறப்பு. ஒரே வாக்குச்சாவடியில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி உயர்ந்து வர முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.
நான் ஆளுநராக ஆன பிறகு, அந்தந்த மாநிலத்தின் முதல் குடிமகன் அவர்கள் தான். அதனால் அந்த மாநிலத்திற்கே அவர்கள் தங்களது வாக்குகளை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், என் வாக்கு தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தபோதும், என் வாக்கை தமிழ்நாட்டிலேயே, இந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்தேன். அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். இது ஜனநாயகத் திருவிழா. அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
