சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக இன்று வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலுக்காகக் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்தத் தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் ஆவார். தமிழகம் முழுவதும் இந்தத் தேர்தலுக்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 10 நிமிடம் முன்னதாக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாகத் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார் நடிகர் அஜித்.
முன்னதாக நடிகர் அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் வாக்கு சாவடி மையத்தில் திரண்டதால் அப்பகுதியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் 10 நிமிடங்களுக்கு முன்பே அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வந்த அஜித் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
