தமிழ்நாட்டில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆலங்குளம், மயிலாப்பூர் மற்றும் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் தொடர்பாக ‘அறப்போர் இயக்கம்’ தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு மிக அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
குறிப்பாக ஆலங்குளம், மயிலாப்பூர் மற்றும் திருமங்கலம் ஆகிய மூன்று தொகுதிகளில் பண விநியோகம் நடைபெற்றதற்கான தெளிவான முதற்கட்ட ஆதாரங்கள் (prima facie evidence) கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களுடன் கூடிய வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில், இந்த 3 தொகுதிகளிலும் தேர்தலை முன்னெடுத்து நடத்துவது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாகும். எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது:
ஆலங்குளம், மயிலாப்பூர் மற்றும் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பண விநியோகம் மற்றும் வாக்காளர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள்மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
இது குறித்த தவறு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதுடன், அவர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க, தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.










