தவெகவின் ‘குதிரை பேர அரசியல்’ சர்ச்சை.. காங். எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர்- ஜோதிமணி இடையே கடும் மோதல்!

Published On:

| By Mathi

Jothimani manickam tagore

குதிரை பேர அரசியலை காங்கிரஸ் (Congress) கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி (Jothimani) எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் எஸ்பி வேலுமணி அணியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது குதிரை பேர அரசியல் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதனை நியாயப்படுத்தி இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி.யான ஜோதிமணி, மாணிக்கம் தாகூருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது.

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக
மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும்.

தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது. இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share