கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைத்ததற்கு எதிராகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய 13 நாள் போராட்டத்திற்கு அன்று எதிர்க்கட்சியாக ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியில் அமர்ந்த பிறகு அதே தனியார்மயமாக்கல் கொள்கையை நோக்கி நகர்வது தூய்மைத் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த போராட்டமும், தவெகவின் வாக்குறுதியும்:
கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை எதிர்த்து 2,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக 13 நாட்கள் தொடர் அறவழிப் போராட்டத்தை நடத்தினர். 13-வது நாள் நள்ளிரவில் காவல்துறை மூலம் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, பலவந்தமாகக் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் (தற்போதைய முதல்வர்) விஜய், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளைத் தனது பனையூர் இல்லத்திற்கு நேரில் வரவழைத்துப் பேசினார். “எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்தவொரு தனியார்மயமாக்கல் திட்டத்தையும் தவெக ஏற்காது; தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்புக்கு தவெக என்றும் துணை நிற்கும்” என அப்போது அவர் உறுதியான வாக்குறுதியை அளித்திருந்தார்.
அப்போது தவெக தலைவர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கையில்,கரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.
அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.
பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.” என அப்போதைய திமுக அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இதைத்தொடரந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சி அமைத்து. இதனால் தங்களது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தூய்மை பணியாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
அதிர்ச்சி கொடுத்த தவெக அரசு – தனியாருக்குக் கதவு திறப்பு?
ஆனால், தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் பொது-தனியார் கூட்டு பங்களிப்பு (PPP – Public-Private Partnership) மாதிரியின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களை நியமிக்கத் தற்போதைய தவெக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தவெக அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் நகர்வு, அன்று தவெக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பேரிடியாக இறங்கி உள்ளது.
கோட்டை நோக்கிப் பேரணி – தவெக அரசுக்கு எச்சரிக்கை:
தவெக அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் நடவடிக்கையைக் கண்டித்தும், தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ சார்பாக நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் சென்னை எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கிப் பிரம்மாண்ட பேரணியாகச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசுத் துறையில் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்திருந்தால் எங்களை நிரந்தரப்படுத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சி அமைத்து 40 நாட்களுக்குள் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான சமூக நீதி அரசு? அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை நேரில் அழைத்து ஆதரவு கொடுத்துவிட்டு, இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு எங்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் தனியார்மயத்தை நோக்கியே தவெக தலைமையிலான அரசும் செல்கிறது. முதல்வர் விஜய் எங்களை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்துள்ளனர்.
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்கு முன்னர் தூய்மைத் தொழிலாளர்களின் உரிமைக்காக அன்றைய ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்த தவெக, இன்று ஆட்சியில் அமர்ந்ததும் அதே பாணியில் தனியார்மயத்தை நோக்கி நகர்வது தமிழக அரசியல் வட்டாரத்திலும், உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
