அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றி உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 2011, 2016, 2021 என மூன்று தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே அதிக இடங்களை வென்று வந்தது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. இம்முறை கோவை மாவட்டத்தில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணிகளைத் தீவிரப்படுத்தியது திமுக. அதற்காக கரூர் மாவட்டத்தில் திமுக முகமாகக் கருதப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டார். கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை பெற்றுத் தரும் முயற்சியில் செந்தில் பாலாஜி தீவிரமாக ஈடுபட்டார்.
ஆனால் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் தலைகீழான முடிவு வெளியானது. தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவின் கோட்டையைத் தகர்த்ததோடு, திமுகவின் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கியது.
கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய ஆறு தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றது. கோவை தெற்கு மற்றும் வால்பாறை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெற்றி பெற்றார். பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.இந்த முடிவுகள் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
