ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாகக் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக சார்பில் பெரிய கருப்பன் போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பெற்று வந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவரே களம் இறங்கினார்.

ADVERTISEMENT

இத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், த.வெ.க. வேட்பாளராக சீனிவாச சேதுபதி, நாம் தமிழர் வேட்பாளராக ரம்யா மோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் பெரிய கருப்பனுக்கும் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் இழுபறி நிலவியது. கடைசிப் பெட்டியை எண்ணும் போது அந்த எந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அமைச்சர் பெரிய கருப்பன் 83,374 வாக்குகளும், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பெரிய கருப்பனைவிட த.வெ.க. வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றியைக் கைப்பற்றியுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share