“உங்களுக்கு விவசாயம் பத்தி தெரியாது.. IAS பேச்சை கேட்காதீங்க!” – விஜய்யை விமர்சித்த தவெக அருள் ஆறுமுகம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்த்து களம் கண்டு 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தற்போது ரூ.50,000 வரை மட்டுமே கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுமையாக (100%) கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக-வின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது அக்கட்சியைச் சேர்ந்த அருள் ஆறுமுகமே தனது தலைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

ADVERTISEMENT

“விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம்தான் இந்த பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பு. மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே.. நீங்கள் விவசாயிகளுக்கு வாக்குறுதி தரவில்லை, உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

உடனடியாகச் சிறு, குறு விவசாயிகளின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள்; பெரு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுங்கள். உங்களுக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது என்பதால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு இப்படித் தவறான முடிவை எடுக்கக் கூடாது. இது தவெக-வின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிடும்.

ADVERTISEMENT

தேர்தல் வாக்குறுதிப்படி திட்டங்களைச் செயல்படுத்துங்கள். தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால், முதலில் வாக்குறுதிப்படி அறிவிப்பைக் கொடுத்துவிட்டு, அதன்பின் தேதி வாரியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கலாம். தற்போதைய அறிவிப்பு விவசாயிகளிடம் பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும். எனவே, உடனடியாக இந்த அறிவிப்பை மாற்றி, தேர்தல் வாக்குறுதிப்படிச் செயல்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share