அதிமுகவுடன் (AIADMK) தமது கட்சி இணைக்கப்படுகிறதா? என்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று ஜூன் 11-ந் தேதி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் அளித்த பதில்: 2017-ம் ஆண்டு நான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக 2 மாதம் இருந்தேன். அதன் பிறகு என்னை நீக்கினார்கள். அப்போது அதிமுகவில் அவர்களுக்கு துணையாக, அவர்கள் கூட செயல்பட்டவன் தான் நான். அதனால 6 மாதம் பொறுத்திருந்தேன்.
நான் சிறைக்கு போய்விட்டு வந்த பிறகும் காத்திருந்தேன். ஜெயலலிதா வளர்த்த கட்சி.. அவசரப்படக்கூடாது என்பதால் பொறுமையாக இருந்தோம்.
அமமுக (AMMK) தனிக் கட்சி ஏன்?
எந்த ஒரு மனிதனுக்கும் சுய கவுரவத்துக்கு பாதிப்பு வரும் போது கோபம் வரும். அதன் பிறகுதான் அமமுக தொடங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக அமமுக, தமிழ்நாட்டில ஒரு கட்சியாக இருக்கிறது.
அமித்ஷாவின் விருப்பம்
2021 சட்டசபை தேர்தலின் போது, மத்திய அமைச்சர் அமித் ஷா என்னை அழைத்து, ”நீங்கள் எல்லாம் ஒன்றாக வரணும்னு” (ஒரே அதிமுகவாக) என்று சொன்னார். ஆனால் அப்போது கூட, ”ஒரே கட்சியா வரவில்லை, நாங்க கூட்டணியில இணைகிறோம்” என்று சொன்னோம். அப்போது அது நடக்காமல் போய்விட்டது.
மன வருத்தங்கள் இல்லை
இந்த தேர்தலின் போதும் அமித்ஷா என்னை அழைத்து பேசினார். அப்போது, என் மனவருத்தங்களையெல்லாம் விட்டுட்டு, நாங்க அனைவருமே மீண்டும் அண்ணா திமுக ஆட்சி வரணும், ஜெயலலிதாவின் ஆட்சி வரணும், அப்படிங்கிறதுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
விஜய்க்கு ஆதரவு தராதது ஏன்?
நான் இப்போதும் அதிமுகவுடன் இருக்கிறேன். அதிமுக கூட்டணியில்தான் இருக்கேன். விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என என்னிடத்தில் பலபேர் பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில இருக்கிற சூழ்நிலையில் மற்ற கட்சிகள் மாதிரி நேர் எதிரான இன்னொரு கூட்டணியில போய் ஆதரவு கூடாது; அது தவறு என நினைத்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில, அமமுக ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற முடிந்தது. இருந்தாலும் நாம் அதிமுக கூட்டணியில இருப்பதுதான் கூட்டணி தர்மம். அதுதான் என்னுடைய குணாதிசயமும் கூட.
அதிமுகவுடன் (AIADMK) அமமுக இணைப்பு?
இந்த கடினமான நேரத்திலும் நான் அண்ணா திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறேன். அதிமுகவும் அமமுகவும் ஒரே கட்சியா இணைந்துதான் ஆகணும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலை வந்திருப்பதாக, மற்றவர்கள் நினைக்கலாம். எங்க கட்சியில எந்த நிர்வாகிகளும், தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் என்கிட்ட அந்த மாதிரி பேசல. சரி, பார்ப்போம்.. வெயிட் பண்ணுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
