கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘அரக்கன்’ என குறிப்பிட்டதும், அதற்கு சுந்தர் பிச்சை கொடுத்த பதிலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளை மாளிகையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக நடந்த இந்த சந்திப்பில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு முடிந்ததும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுந்தர் பிச்சையை பார்த்த டிரம்ப், “சுந்தர்… நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
சுந்தர் பிச்சை பேச தொடங்கியதும் குறுக்கிட்ட டிரம்ப், “இந்த ஆள் ஒரு அரக்கன். ஆனால் யாருக்கும் இவரை தெரியாது. என்ன ஒரு அருமையான வாழ்க்கை! அரக்கனாக இருந்துகொண்டு இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதும் இல்லை. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். சுந்தர்… சுந்தர் என்பது இவரது பெயர்” என்று கலாய்த்தார். டிரம்ப் இப்படி சொன்னதும் சுந்தர் பிச்சை சிரித்தபடி கையெடுத்து கும்பிட்டார்.

பின்னர் அவரும் டிரம்பை நகைச்சுவையாக கலாய்க்கும் வகையில், “நான் ஒரு அரக்கன் என்பதைவிட வேற நல்ல அடைமொழி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
