தமிழகத்தில் டிரெக்கிங்கிற்கு தடை!

By Minnambalam Desk

|

Published on 19 Feb 2025, 5:34 PM

தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மலையேற்ற நடைபயணத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இயற்கை அழகு பரவசமாக பரவி இருக்கும் மலைப்பகுதிகளில், சுற்றுலா பயணிகள் மற்றும் சாதாரண பொதுமக்கள் அனுமதியுடன் மலையேற்ற நடைபயண (டிரெக்கிங்) அனுபவத்தை பெற கடந்த ஆண்டு தமிழக அரசு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ADVERTISEMENT

www.trektamilnadu.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னரே இந்த நடைபயண அனுமதி வழங்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்து, நிலையான சுற்றுலா முறைகளை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.

இந்த திட்டம் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 40 இடங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இவை 14 மாவட்டங்களில் உள்ள 18 வனப் பிரிவுகளில் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

பல்வேறு சுற்றுலா விரும்பிகள், அகழ்வாராய்ச்சி மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இதன் மூலம் மலைப்பகுதிகளை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக வனத்துறையின் அறிவிப்பின்படி, ஏப்ரல் 15ஆம் தேதி வரை மலையேற்ற நடைபயணத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெயில் தீவிரமாக அதிகரிக்கும் காலகட்டம் என்பதால், காட்டு தீ போன்ற அபாயங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வெப்பநிலை அதிகரிப்பால் வறண்ட நிலை ஏற்பட்டு, காட்டு தீ வாய்ப்பு அதிகரிக்கிறது. நடைபயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கருத்தில் கொண்டு, இந்த தற்காலிகத் தடையை விதித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு, நிலைமையை மதிப்பீடு செய்து, டிரெக்கிங் அனுமதி மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.இந்நிலையில், டிரெக்கிங் ஆர்வலர்கள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அண்மை அறிவிப்புகளைப் பெற்று பயணம் திட்டமிட வேண்டும் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதலே முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel