பேருந்துகளில் குடை பிடித்து பயணம் : அமைச்சர் முக்கிய உத்தரவு!

Published On:

| By Kavi

வட கிழக்கு பருவ மழைக்காலம் நெருங்கி வருகிறது. தற்போதே பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மழை காலங்களில் அரசு பேருந்துகளில் பழுதடைந்த மேற் கூரைகளில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சில சமயங்களில் பேருந்துகளுக்கு உள்ளே பயணிகள் குடை பிடித்து பயணிப்பதையும் பார்த்திருக்கிறோம்.கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின்  சொந்த ஊரான அரியலூரில் கனமழை பெய்தது.அப்போது பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ADVERTISEMENT

சிலர்  மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்து பாதுகாத்து கொண்டனர்.இதேபோன்று பல அரசு பேருந்துகளிலும் மழைநீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  பேருந்துகளை அரசு சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தசூழலில் இன்று (ஆகஸ்ட் 30) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது அதிகாரிகளுக்கு அமைச்சர் முக்கிய அறிவுரைகளையும் உத்தரவையும் பிறப்பித்தார்.

“விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனை மலைப் பகுதியில் உள்ள மகளிர் அனைவரும் பயன் அடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை கடந்துள்ளது. புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதையும், பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணியினையும் விரைவுப்படுத்திட வேண்டும்,

பணிக்கு வராத பணியாளர்களை, பொதுமக்களின் நலன் கருதி, பணிக்கு தவறாமல் வருகை புரிந்து பேருந்துகளை இயக்கிட ஏதுவாக. அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டு வரும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதையும், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேட்டையும் துரிதப்படுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக விபத்துக்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை ஆராய்ந்து, அதனை வெகுவாக குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தொலைதூரப் பேருந்து பயணிகள் அனைவரும் இருக்கையை உறுதி செய்து பயணித்திட ஏதுவாக, பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு வசதியை தேர்ந்தெடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

உதவி எண்ணின் மூலம் பெறப்படும் பொதுமக்களின் குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும்.

மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித இடர்பாடும் இன்றி பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக, பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

பிரியா
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share