எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பல தேர்வுகள் உள்ளன என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒன்று மட்டுமே உள்ளதாகவும் உத்தவ் தாக்கரே இன்று (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சிகளின் 3வது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நாளை மற்றும் நாளை மறுதினம் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சரத் பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் செய்தியாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பேசுகையில், இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் நாட்டில் அழுத்தமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படாது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தற்போது எந்தக் குழப்பமும் இல்லை. இக்கட்சியில் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று சரத் பவார் தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு பல தேர்வுகள் உள்ளது!
தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “பிரதமர் பதவிக்கு இந்தியா கூட்டணியில் பல தேர்வுகள் உள்ளது. ஆனால் பாஜக கூட்டணியில் ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ளார்.
“ரக்ஷா பந்தன்” பரிசாக சிலிண்டருக்கு எல்.பி.ஜி. விலையை ரூ.200 குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கூட ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது என்பதை பாஜகவுக்கு நியாபகப்படுத்துகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி வேகமாக முன்னேறி வருகிறது. இந்த நேரத்தில் வேறு வழியின்றி எல்பிஜி சிலிண்டர் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் நாங்கள் முன்னேறும்போது சிலிண்டர்களை பாஜக அரசு இலவசமாகவும் வழங்கலாம்.
ஆனால் பாஜக இப்போது என்ன செய்தாலும் அவை அனைத்தும் தேர்தலுக்காக தான் என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பைல்ஸ்: கொந்தளித்த எடப்பாடி
லவ்குருவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு
மோடி இதை செய்தாலும் ஆச்சரியமில்லை: ஸ்டாலின்