டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

Published On:

| By christopher

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

92 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 22) கடைசி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும், அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சென்னையின் 383 வது பிறந்தநாள்!

வந்தாரை வாழவைக்கும் சென்னை இன்று தனது 383வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது. 1639-ம் ஆண்டு உருவான சென்னைப் பட்டினம், 383 ஆண்டுகளில், இந்தியாவின் முக்கியமான நகரமாக, தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து நகரின் பல பகுதிகளிலும் இன்று சென்னை மாநகராட்சி கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை!

அதிமுகவின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 93வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,63,322 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து ,19,342 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 743 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

12ம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு ரிசல்ட்!

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் தமது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு ரூ.1500 – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2022 – 23 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனை பள்ளி மாணவர்களிடம் மேம்படுத்திக்கொள்ளும் வகையில், தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வில், பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வெழுதும் மாணவர்களில் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தினை முறையாக அமல்படுத்தும்படி மத்திய அரசை தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். இதனையடுத்து விவசாயிகளின் இன்றைய போராட்ட அறிவிப்பை முன்னிட்டு டெல்லியில், போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். சிமெண்ட்டால் ஆன தடுப்பான்களையும் போலீசார் அமைத்து வருகின்றனர்.

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி!

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் இன்று களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது சமூக வலைதளத்தில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற சில்லவுட் புகைப்பட போஸ்டரை வெளியிட்டுள்ளது.

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share