“அரசு வேலைதான் என் லட்சியம்” என்று இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு, இதோ ஒரு மிக முக்கிய அறிவிப்பு. 2026ஆம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள், எப்போது நடைபெறும் என்பதற்கான முழுமையான கால அட்டவணையை (Annual Planner 2026) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தத் திட்டம் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான உத்தேசத் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்வு எப்போது?
சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் குரூப் 4 தேர்வுதான் இந்த அட்டவணையின் ‘ஹாட் டாக்’.
அறிவிப்பு தேதி: அக்டோபர் 6, 2026.
தேர்வு தேதி: டிசம்பர் 20, 2026.
“என்னப்பா இது… தேர்வு வர இன்னும் ஒரு வருஷம் ஆகுமா?” என்று தேர்வர்கள் சற்றே சோர்வடைந்தாலும், “படிக்க நிறைய நேரம் கிடைத்திருக்கிறது; இப்போதே திட்டமிட்டால் உறுதியாக வேலையைத் தட்டித் தூக்கலாம்” என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.
குரூப் 1 & குரூப் 2 அப்டேட்ஸ்:
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜூன் 23, 2026 அன்று வெளியாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6 அன்று நடைபெறும்.
அதேபோல, பட்டதாரிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் குரூப் 2, 2A (நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு ஆகஸ்ட் 11, 2026 அன்று வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் 25 அன்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கியத் தேர்வுகள்:
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Technical Services): மே 20 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் அறிவிப்புகள் வெளியாகும்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் (Engineering Services): ஏப்ரல் 1, 2026 அன்று அறிவிப்பு வெளியாகும்.
தேர்வர்களுக்கு அறிவுரை:
இந்தத் தேதிகள் அனைத்தும் உத்தேசமானவையே (Tentative). நிர்வாகக் காரணங்களுக்காக இதில் மாற்றங்கள் ஏற்படலாம். இருப்பினும், தேர்வர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இந்த அட்டவணை ஒரு சிறந்த வழிகாட்டி.
“தேர்வு வரட்டும் பார்த்துக்கலாம்” என்று இல்லாமல், இப்போதே சிலபஸை கையில் எடுத்துப் படிக்கத் தொடங்குங்கள். 2026ஆம் ஆண்டு உங்கள் ஆண்டாக மாற வாழ்த்துகள்! முழுமையான அட்டவணையை www.tnpsc.gov.in இணையதளத்தில் ‘Recruitment Planner’ பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
