‘கள உதவியாளர்’ பதவி உயர்வு வழங்கக் கோரி கேங்மேன் ஊழியர்கள் போராட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கள உதவியாளர் பதவி உயர்வு கோரி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கேங்மேன் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு செய்ய வேண்டும் எனக் கோரி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,600க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். மின் வாரியத்தில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இவர்கள் தங்களின் தொழில்நுட்பமற்ற பணிகளுடன் சேர்த்து மின் தடை நீக்கம், உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதை பராமரிப்பு, புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரகாலப் பணிகளையும் கள உதவியாளர்களுக்கு இணையாக மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சமீபத்தில், மின்வாரியத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதியவர்களை நியமிக்கும் போது, தங்களுக்கு முன்னுரிமை அளித்து கள உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை அலுவலகப் பகுதியில் (பின்புறம்) இன்று இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசும் மின்வாரியமும் இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share