ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தைத் தடுக்க அரசுக்கு மனம் இல்லையா என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில், விழாக் காலங்கள், விடுமுறை நாட்கள், சனி ஞாயிறு கிழமைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை, நெல்லை, கோவை, கன்னியாகுமரி என நெடுந்தூரம் செல்லும் பேருந்துகளில் 3000 ரூபாய் 4000 ரூபாய் என அதிக அளவு வசூலிக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கதிர் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அதில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், “ஆம்னி பேருந்துகள் கட்டணம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்தது. அப்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குமுறை படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆம்னி பேருந்துகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தனியார் பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு இடைக்காலத் தடை பெற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘உச்சநீதிமன்ற தடையை நீக்க எட்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசுக்கு மனம் இல்லையா?
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
