நீட் மறுதேர்வு எதிரொலி: இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு செக் வைத்த மத்திய அரசு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Telegram

நாடு முழுவதும் வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை தடுக்கும் நோக்கில், இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, நீட் மறுதேர்வு நடைபெறும் காலம் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை, அதாவது வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியை அணுகுவதற்கு முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப சட்டம் இரண்டாயிரமாவது ஆண்டு பிரிவு 69 ஏ-இன் கீழ் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

டெலிகிராம் தளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையைத் தவிர, மற்றொரு முக்கிய உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, டெலிகிராமில் ஏற்கனவே பதிவிட்ட மெசேஜ்களை மாற்றியமைக்கும் எடிட் வசதிக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு, பழைய பதிவுகளை எடிட் செய்து, வினாத்தாள் முன்பே கசிந்துவிட்டது என்பது போன்ற போலி ஆதாரங்களை மோசடி கும்பல்கள் உருவாக்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை விளக்கியுள்ளது.

முன்னதாக கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகாரை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது. அகமதாபாத் சைபர் கிரைம் மற்றும் பீகார் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், டெலிகிராம் வழியாக ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share