மின் வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடு போனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்ற அமைச்சர் நிர்மல் குமால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவற்றில் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளும் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருந்தபோது இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “மின்சார வாரிய அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் இடங்களில் தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் இருந்த ஒரு சில நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து முக்கிய ஆவணங்களையும் ‘பேக் அப்’ (Backup) எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் ஊழல் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.
ஒரு சில ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதிலுள்ள தரவுகள் (Data) டிஜிட்டல் முறையில் மட்டுமின்றி, மேனுவல் (Manual) கோப்புகளாகவும் உள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் டிரான்ஸ்பார்மர் ஊழல் நடந்தது. அவர் இருந்த காலகட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்த விவரங்கள் தான் சமீபத்தில் சிபிஐ விசாரணைக்குச் சென்றன. இப்போது எந்த நோக்கத்திற்காக இவை திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடக்கும்போது நான் இது பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. விசாரணை முடிந்த பிறகு முழு விவரங்களையும் சொல்கிறோம்” என்றார்.
மேலும், எத்தனை ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயின என்பது குறித்தும் விசாரணைக்குப் பின்னரே கூற முடியும் என்ற அமைச்சர், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் துறைக்குள் இருக்கும் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகவே இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டுச் செய்தி பரப்பப்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “மின்சாரத் துறையில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து தினமும் மின்சார வாரியத்தின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கம் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நான்கு நாட்களாகக் காற்றாலை மின்சாரம் கிடைப்பதில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் வெளியில் இருந்து மின்சாரத்தைப் பெற்று விநியோகிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற நடைமுறைப் பிரச்சினைகளை நாம் தினமும் வெளிப்படையாக அறிவித்து வருகிறோம். அதற்கும், இந்தத் திருட்டு விவகாரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று விளக்கமளித்தார்.
இந்த ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “கடந்த ஒரு மாத காலமாகவே தவறு செய்த பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டு விவகாரத்தில் தற்போதுதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக, யார் சொல்லி இவர்கள் திருடினார்கள்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தெரிவிக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.










