தமிழகத்தில் 3.70 லட்சம் மின் கட்டணப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விஜய் ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? ரீடிங் எடுப்பதில் கோளாறா? உண்மை என்ன? என்று மின்னம்பலத்தில் விரிவான செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பதிவில் “3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கோடைகாலத்தில் அதிக அளவில் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது. தற்போது 9. 60 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இது குறித்து வழக்கமான ஆய்வுகளை செய்கிறோம்.
இதனால் சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை குழப்பக் கூடாது என தெரிவித்துள்ளார்.
