விஜய் தலைமையிலான தவெக அரசு காவிரி விவகாரத்தில் ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை அலட்சியப்படுத்துவதும் அனுபவக் குறைவான அதிகாரப் போக்காக உள்ளது. இந்த விவகாரத்தில் தஞ்சையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 31) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையிலும், குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக்கும் வகையிலும் மேகதாது அணை கட்ட கருநாடக அரசு திட்டமிட்டு வருகிறது.
இப்பிரச்சினையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு கருநாடகாவிற்கு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தன் உரிமைகளை வலியுறுத்தி, இந்த முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகி தன் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
நம் விவசாயிகளின் வாழ்வாதார உரிமை!
நாம் கேட்பது சலுகையோ, பிச்சையோ அல்ல; அது சட்டப்படியும், நியாயப்படியும் நம் மாநிலத்திற்குச் சேர வேண்டிய வாழ்வாதார உரிமை!
எனவே, இதற்கு எதிராக அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கருநாடக அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தமிழ்நாட்டிலுள்ள, அநேகமாக ஆளுங்கட்சியாக உள்ள த.வெ.க.வைத் தவிர மற்றவர்கள் ஏற்கவில்லை.
அரசோ, முதலமைச்சரோ சற்றும் காது கொடுத்துச் செயல்படவில்லை!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று, அவர்களுடைய கூட்டணிக் கட்சியினர் விடுத்த வேண்டுகோளையும்கூட ஏற்காமல், ‘தானடித்த மூப்பாக’ கருநாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இப்போது பேச்சுவார்த்தைகள் என்பது எந்தப் பலனையும் தராது; காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றிய வரலாறு அறியாத ஆட்சியினர் சற்று விவரம் தெரிந்து தனது நிலைப்பாட்டை எடுக்கத்தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் சில கட்சிகளைத் தவிர மற்றவர்களும் கோரிக்கை விடுத்தும்கூட, அரசோ, முதலமைச்சரோ சற்றும் காது கொடுத்துச் செயல்படவில்லை.
இதற்குமுன் ஏறத்தாழ அரை நூற்றாண்டுப் போராட்டமே தமிழ்நாட்டிற்குக் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை.
கடந்த கால வரலாறு மட்டுமல்ல, நேற்றுவரை தமிழ்நாடு காணும் யதார்த்த நிலை!
நடுவர் மன்றத் தீர்ப்பைக் கூட மதிக்கவேயில்லை. வயல்கள் வறண்டு, பயிர்கள் வாடிய நிலையில்கூட, தண்ணீர் தர மறுத்தது கருநாடகா. எத்தனையோ முறை ஏறத்தாழ முப்பது முறை பல முதலமைச்சர்கள் பேசிப் பேசிப் பார்த்து, இறுதியில் உச்சநீதிமன்றத்தின் ஆணை காரணமாக, ஓரளவு தமிழ்நாட்டின் விவசாய உரிமை நிலைத்தது; அதில்கூட நதிநீர் ஆணையம் தருமாறு ஆணையிட்ட அளவைக் கருநாடகத்தில் – எந்தக்கட்சி ஆட்சி வந்தாலும் – ஒரே குரலில் தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கீட்டை முறையாக, சட்டப்படி, நேர்மையான முறையில் தர மறுத்துதான் வந்துள்ளன என்பது கடந்த கால வரலாறு மட்டுமல்ல, நேற்றுவரை தமிழ்நாடு காணும் யதார்த்த நிலை.
கருநாடகா காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில், அதிக மழை பெய்து, வெள்ளத்தால் கருநாடகப் பகுதிகள் மூழ்கி, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் மட்டும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீரை ஏராளமாக – தாராளமாகத் திறந்து விடுவதுபற்றி பலமுறை சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். (Nothing but Drainage Outlet).
கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் இப்பிரச்சினையில் ஒரே அணியில் திரண்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலோ அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து, ஒரே குரலில் உரிமைகளை வலியுறுத்த வேண்டிய ஆளும் அரசு, அதற்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி, விவசாயிகளின் வேதனைக்குரலையும் அலட்சியப்படுத்தி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் உள்ளது.
அனுபவக் குறைவான அரசியல் மட்டுமல்ல; மக்களின் குரலை மதிக்காத அதிகாரப்போக்கே!
இது அனுபவக் குறைவான அரசியல் மட்டுமல்ல; மக்களின் குரலை மதிக்காத அதிகாரப்போக்குமே ஆகும். விரைவில் இதை மக்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள்!
தி.மு.க. தலைவரின் அழைப்பு, காலத்தாற் செய்யப்பட்ட கடமையின் வெளிப்பாடு!
‘‘தஞ்சையில் ஒத்தக் கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணை கட்டும் கருநாடகா அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்திட, கடமையாற்றிட, உரிமைக் குரலை எழுப்ப முன்வரவேண்டும்’’ என்று முறைப்படி எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க., அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அழைப்பு, காலத்தாற் செய்யப்பட்ட கடமையின் வெளிப்பாடு!
திராவிடர் கழகம், ஏற்கெனவே திருவாரூரில் கடந்த 30.5.2026 அன்று ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இப்போது தி.மு.க. விடுத்துள்ள அழைப்பை ஏற்று, 3.8.2026 அன்று, தஞ்சையில் நடைபெறும் மாபெரும் அறப்போராட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்று, தனது கடமையாற்றும்!
எனவே, நமது இயக்க முக்கிய பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் பெருவாரியாகக் கலந்துகொண்டு, விவசாயிகளின் வாழ்வாதார உரிமைப் போரில், நமது பங்களிப்பைச் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்! ” என தெரிவித்துள்ளார்.
