டாஸ்மாக் முறைகேடு வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் பரபர வாதம் – செந்தில் பாலாஜிக்கு நிம்மதியளித்த உத்தரவு!

Published On:

| By Kavi

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (ஜூலை 31) தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”அமலாக்க துறையின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஜூலை மாதத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அவர்கள் குறிப்பிடும் சம்பவங்கள் 2021 முதல் 2025 காலகட்டத்தை சேர்ந்தவை. 

2025ல் உச்சநீதிமன்றத்தில் அமலாக்க துறையால் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் ஜூலை 28ஆம் தேதி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவித்தார். 

அப்போது தலைமை நீதிபதி, மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரிடம், ”இந்த வழக்கு ஆவணங்கள் சார்ந்த ஆதாரங்களை மட்டுமே கொண்டது என்பதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு அவர், ”இந்த சம்பவங்கள் எல்லாம் 2021 முதல் 2025 வரை நடந்த சம்பவங்கள் பற்றியதுதான். அப்போது அவர் அமைச்சராக இருந்ததால் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய விடாமல் தடுத்துவிட்டார்” என்று கூறினார். 

”இது ஒரு தீவிரமான ஊழல் வழக்கு என்பதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது” என்று மாநில அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார் 

மேலும் செந்தில் பாலாஜியின் பின்னணி பற்றி குறிப்பிட்ட அவர், ”வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றமே தனது முந்தைய தீர்ப்பில் செந்தில் பாலாஜியை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநில அரசு தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன் செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். அதேசமயம் செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளையும், ஆதாரங்களையும் பாதிக்கும் வகையிலான செயலில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியத்தை மாநில அரசு நிரூபித்தால் இந்த உத்தரவில் மாற்றம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share