தனக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம், இந்த ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரது பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.
அதில் காலை மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை தளர்த்த கேட்டு செந்தில் பாலாஜி இன்று(ஜூலை 31) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவர் நேற்றும் இன்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவில்லை.
அதேசமயம் டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு இன்னும் சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து தளர்வு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
