‘விஜய் கர்நாடகா வர வேண்டாம்’ – டி.கே சிவக்குமார் வேண்டுகோள்

Published On:

| By Pandeeswari Gurusamy

காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாது அணை குறித்து பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகா வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று (ஜூலை 31) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையில் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இத்தகவலை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், “தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்” என்று கன்னடசாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பதைக் கண்டித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

ADVERTISEMENT

டி.கே. சிவக்குமார் அவசர ஆலோசனை:

இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஜூலை31) அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

முதல்வர் விஜய்யின் பயணம் குறித்து விளக்கம்:

தமிழக முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்துப் பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருவது குறித்துத் தெரிவித்திருந்தாலும், அவரது பயணம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது இரு மாநில நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.

கர்நாடகாவில் தற்போது போராட்டங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருகை தருவது பொருத்தமாக இருக்காது. எங்களின் விருந்தினராக அவர் வரும்போது அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது. எனவே, இரு மாநிலங்களுக்கும் சாதகமான சூழல் அமையும் போது இருவரும் சந்தித்துப் பேசுவோம்,” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share