நிர்மல் குமார் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்… சிவசங்கர் கண்டனம்!

Published On:

| By Kavi

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். 

மின் கட்டண உயர்வு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டது. 

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழி இன்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக பதிலளித்த மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார், ”சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார் ” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் இன்று (ஜூலை 31) மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “புகாரே வரவில்லை, நாங்களே 3.70 லட்சம் இணைப்புகளை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறோம் என்கிறார். இது என்ன கூத்து என்று தெரியவில்லை. 

ADVERTISEMENT

புகாரே வராதாம்… இவர்களே பில் போடுவார்களாம்…. இவர்களே விசாரிப்பார்களாம். 

சினிமாவில் சொல்வது போல இவர்களே குண்டு வைப்பார்களாம் இவர்களே எடுப்பார்களாம்..

நிர்மல் குமார் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறார். 

மின்துறை என்பது மிகப்பெரிய துறை. அதில் என்னென்ன டிவிஷன் இருக்கிறது, எப்படி இயங்குகிறது, அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்று ஓரிரு மாதம் நேரம் எடுத்து நிர்மல் குமார் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு இப்படி எல்லாம் பேட்டி கொடுக்க வர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். 

இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து அவர் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

மின்சாரம் ஏன் அடிக்கடி கட் ஆகிறது என்று கேட்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தை சொன்னார். 

ஒரு நாள், இந்தத் துறையில் இருக்கிற அதிகாரிகளே சதி செய்கிறார்கள் என்று சொன்னார். பின்னர் திமுகவைச் சேர்ந்தவர்கள் பியூஸ் கேரியரை பிடுங்கி சென்று விட்டார்கள் என்று சொன்னார். 

இதைத்தொடர்ந்து பராமரிப்பதில் தான் பிரச்சனை என்று சொன்னார். இப்படி அவருக்கு வருகிற வாட்ஸ் ஆப் செய்திகளை வைத்துக்கொண்டு நிர்மல் குமார் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்து இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறது. ஆனால் இதில் நிர்மல் குமார் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். 

மற்றவர்களை ஏளனம் பேசுவது, நக்கல் நையாண்டி பேசுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். 

இரண்டு நாட்களுக்கு முன் கோவை சென்று இருந்தேன். அங்கு தொழில் செய்பவர்கள், இப்படியெல்லாம் கரண்ட் கட் ஆகாது.. இப்போதெல்லாம் எப்போது போகிறது எப்போது வருகிறது என்றே தெரியவில்லை என்று கூறினார்கள். இதையெல்லாம் ஆய்வு செய்து நிர்மல் குமார் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும். 

ஒளிவு மறைவு இல்லாமல் அவர் பேச வேண்டும். புகார்கள் வந்ததால் சிஎம்டி அறிக்கை கொடுத்திருக்கிறார் அதனால் ஆய்வு செய்கிறோம் என்று சொல்லலாம். 

ஆனால், மறைத்து மறைத்து பேசி என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. 

ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரை போட்டு இந்த ஆட்சியை நடத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். 

முதலமைச்சர் எவ்வழியோ அது போல தான் அமைச்சர்களும் இருக்கிறார்கள். முதலமைச்சர் எந்த பிரச்சினைக்கும் வாய் திறப்பதே கிடையாது.

ஆறு மாத காலத்திற்கு விமர்சனமே செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். நாங்களும் செய்யவில்லை. ஆனால், பாதிக்கப்படக்கூடிய விஷயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

மக்கள் எங்களுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியான எங்களுக்கும் கடமை இருக்கிறது” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share