விஜய் ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? ரீடிங் எடுப்பதில் கோளாறா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

Power Tariff and Metering Concerns in Tamil Nadu

தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் ’அறிவிக்கப்படாத’ மின் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

முந்தைய கட்டணத்துக்கும் தற்போதைய கட்டணத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது என்கிற குமுறலும் வெளிப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த மின் கட்டண மாறுபாட்டுக்கு இடையே தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL)-ன் திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளர் அனுப்பிய ஒரு சுற்றிக்கை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில்

ADVERTISEMENT
  • சில பிரிவுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் அசாதாரணமான பில்லிங் முறைகள் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தையும் நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மீட்டர், மீட்டர் கணக்கீடு அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு மின்நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
  • Mass Raid உள்ளிட்ட அனைத்து சேவைகளின் சரியான மதிப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும். மதிப்பீட்டு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மதிப்பீடுகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க அறிவுறுத்த வேண்டும். அவர்களின் ஆய்வு செயல் திறனை முறையாக பதிவு செய்து மேலும் வலுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் மீட்டர் ரீடிங்கில்தான் பிழை என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி 200 யூனிட் மின்சாரம் என அறிவித்தது.

ADVERTISEMENT

இதன்படி

  • இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் மின் நுகர்வில், 500 யூனிட்கள் அல்லது அதற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை பொருந்தும்.
  • 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, பழைய நடைமுறைப்படியே 100 யூனிட்கள் மட்டுமே இலவசமாகக் கிடைக்கும். இவர்களுக்குப் புதிய 200 யூனிட் சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி

500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் 200 யூனிட் இலவசச் சலுகையைப் பெறுவர்.

ஆனால், 500 யூனிட்டைத் தாண்டி 501 யூனிட் என பதிவானாலும் நுகர்வோர் முழுமையாக 200 யூனிட் இலவசச் சலுகையை இழந்து, பழையபடி 100 யூனிட் இலவச சலுகைக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் என்ற நிலைமைக்கு ஆளாவார்கள்.

இந்த புதிய கணக்கீடும் தற்போதைய மின் கட்டண உயர்வு என்கிற குமுறலுக்கு ஒரு காரணம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் நமது மின்னம்பலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அளித்த விளக்கம்:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 2 ஸ்லாப்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டண முறை; 501 யூனிட் தொடங்கி மற்றொரு கட்டண முறை நடைமுறையில் உள்ளது.

வீட்டு உபயோகம் (500 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு)

0-100 யூனிட்கள்: கட்டணம் இல்லை (இலவசம்)
101-200 யூனிட்கள்: ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.35
201-400 யூனிட்கள்: ஒரு யூனிட்டிற்கு ரூ. 4.70.
401-500 யூனிட்கள்: ஒரு யூனிட்டிற்கு ரூ. 6.30.

வீட்டு உபயோகம் (500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு):

0-100 யூனிட்கள்: கட்டணம் இல்லை (இலவசம்)
101-400 யூனிட்கள்: ரூ. 4.70
401-500 யூனிட்கள்: ரூ. 6.30
501-600 யூனிட்கள்: ரூ. 8.40
601-800 யூனிட்கள்: ரூ. 9.45
801-1000 யூனிட்கள்: ரூ.10.50
1001-க்கு மேல் 1 யூனிட்: ரூ.11.55

200 யூனிட் இலவச மின்சார திட்டம் மே மாதம் அமலுக்கு வந்தது. இதற்கு முன்னர்,

நீங்கள் 300 யூனிட் பயன்படுத்தி இருந்தால்…

முதல் 100 யூனிட் இலவசம்.

  • அடுத்த 100 யூனிட்டிற்கு (101-200) 2.35 ரூபாய் வீதம் = 235 ரூபாய்.
    அடுத்த 100 யூனிட்டிற்கு (201-300) 4.70 ரூபாய் வீதம் = 470 ரூபாய்.

ஆக மொத்தம் 705 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி இருந்திருப்பீர்கள்.

தற்போது அதாவது 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால்

முதல் 200 யூனிட்கள்: முற்றிலும் இலவசம் (கட்டணம்: 0)
அடுத்த 100 யூனிட்கள் (201-300): ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வீதம் = 470 ரூபாய்.

பழைய முறையில் 300 யூனிட்டிற்கு நீங்கள் 705 ரூபாய் செலுத்தினீர்கள்
புதிய முறையில் அதே 300 யூனிட்டிற்கு நீங்கள் 470 ரூபாய் மட்டுமே செலுத்துகிறீர்கள்.

பழைய முறையில் 500 யூனிட்கள் பயன்படுத்தினால்…

  • முதல் 100 யூனிட்கள்: இலவசம்
  • 101 முதல் 200 யூனிட்கள் வரை (100 யூனிட்கள்): ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் வீதம் = 235 ரூபாய்
  • 201 முதல் 400 யூனிட்கள் வரை (200 யூனிட்கள்): ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வீதம் = 940 ரூபாய்
  • 401 முதல் 500 யூனிட்கள் வரை (100 யூனிட்கள்): ஒரு யூனிட்டிற்கு 6.30 ரூபாய் வீதம் = 630 ரூபாய்

ஆக மொத்தம், பழைய முறையில் 500 யூனிட்களுக்கு நீங்கள் 1,805 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

200 யூனிட்கள் இலவசம் என்ற புதிய நடைமுறையில்,

  • நீங்கள் 501 யூனிட் என ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும், அந்த 200 யூனிட் இலவச சலுகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய முறைப்படி 100 யூனிட்கள் மட்டுமே இலவசமாகக் கணக்கிடப்படுகிறது.
  • முதல் 100 யூனிட்கள்:இது இலவசம். கட்டணம் = 0 ரூபாய்
  • 101 முதல் 400 யூனிட்கள் வரை (300 யூனிட்கள் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 4.70 ரூபாய். கட்டணம் = 300 × 4.70 = 1,410 ரூபாய்
  • 401 முதல் 500 யூனிட்கள் வரை (100 யூனிட்கள்): ஒவ்வொரு யூனிட்டிற்கும் 6.30 ரூபாய். கட்டணம் = 100 × 6.30 = 630 ரூபாய்
  • 501-வது யூனிட் (1 யூனிட்):இந்த அடுக்குக்கு 8.40 ரூபாய். கட்டணம் = 1 × 8.40 = 8.40 ரூபாய்.

மொத்தக் கட்டணம்: 0 + 1,410 + 630 + 8.40 = 2,048.40 ரூபாய். ஆக மொத்தம் ரூ. 243.40 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால்தான் மின் கட்டணம் திடீரென உயர்ந்துவிட்டது என்கிற குமுறல் வெளிப்படுகிறது என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். பொதுவாக 501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்பாட்டாளர்களுக்குதான் இத்தகைய கட்டண உயர்வு தோற்றம் வருகிறது.

ஆனால் 612 யூனிட் ஓடி இருந்தால் வழக்கமான அதே 2,993.40 ரூபாய்தான் கட்டணம் செலுத்தப்படுகிறது.

இந்தப் படங்களில் ஏப்ரல் மாதத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் நடைமுறையில் இருந்த போது கணக்கிடப்பட்ட விவரம்:

101 – 200 யூனிட்: யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.35
201 – 400 யூனிட்: யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.70
401 – 490 யூனிட்: யூனிட் ஒன்றுக்கு ரூ. 6.30

2-வது படம் ஜூன் மாதம் அதாவது 200 யூனிட் மின்சாரம் இலவசம் நடைமுறைக்கு வந்த நிலையில்

101 – 400 யூனிட் ஒரே அடுக்காக மாற்றப்பட்டு, அனைத்து யூனிட்டிற்கும் ரூ. 4.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
401-500 யூனிட் ரூ 6.30; 501-600 யூனிட் ரூ.8.40 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் ”திடீரென மின் கட்டணம்” உயர்ந்துவிட்ட அதிர்ச்சி ஏற்படுகிறது.

அதே நேரத்தில் நெல்லை மண்ட தலைமை பொறியாளர் சுற்றறிக்கையின்படி, 490 யூனிட் ஓடியதை 505 என தவறுதலாக எழுதி இருந்தால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமைதான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share