2026 FIFA World Cup Final: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி- ஸ்பெயின் மீண்டும் சாம்பியன்! அர்ஜென்டினாவை வீழ்த்திய ‘லா ரோஜா’!

Published On:

| By Mathi

2026 FIFA World Cup Final

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் (2026 FIFA World Cup Final) ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 2026-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை வென்றுள்ளது. உலகமே எதிர்பார்த்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி தனது முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து வெற்றிவாகை சூடியுள்ளது.

அமெரிக்காவின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் இன்று ஜூலை 20-ந் தேதி அதிகாலை இந்திய நேரப்படி 12.30 மணிக்கு 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி (2026 FIFA World Cup Final) தொடங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டியை நேரில் காண அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஸ்பெயின் மன்னர் பிலிப் VI உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் வருகை தந்தனர்.

ADVERTISEMENT

ரசிகர்களை கட்டிப் போட்ட அதகள ஆட்டம்

ஆட்டம் தொடங்கிய முதலே ஸ்பெயின் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லமின் யமால் மற்றும் டேனி ஓல்மோ ஆகியோரின் ஒருங்கிணைந்த தாக்குதல்களை அர்ஜென்டினாவின் தற்காப்பு வீரர்கள் முறியடித்தனர். 15-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் செய்த ஃபவுல் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றியது. 40-வது நிமிடத்தில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரோட்ரியை வீழ்த்தியதற்காக, அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸிற்கு இந்த ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

44-வது நிமிடத்தில் எதிர்பாராத விதமாக அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்; அவருக்குப் பதிலாக மூத்த வீரர் நிக்கோலஸ் ஓட்டமெண்டி களமிறக்கப்பட்டார். இடைவேளைக்குப் பிறகு, அர்ஜென்டினா அணியில் லியாண்ட்ரோ பரேடெஸ் களமிறக்கப்பட்டு, நிக்கோ கோன்சலஸ் வெளியேற்றப்பட்டார்.

ADVERTISEMENT

2-வது பகுதியில் அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயினின் ரோட்ரியை பின்னால் இருந்து தள்ளியதற்காக மஞ்சள் அட்டை பெற்றார்.

அர்ஜென்டினா அணி ஸ்பெயினின் சீரான ஆட்டத்தைக் குலைக்கவும், அவர்களை ஆத்திரமூட்டி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. பரேடெஸ் போன்ற “டார்க் ஆர்ட்ஸ்” (dark arts) என்று அழைக்கப்படும் தந்திரமான விளையாட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்களைப் பயன்படுத்தி, ஆட்டத்தின் போக்கை மாற்ற அர்ஜென்டினா முனைப்பு காட்டியது.

ADVERTISEMENT

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக இரண்டு அதிரடி முன்னேற்றங்களை முன்னெடுத்து, அர்ஜென்டினாவின் தற்காப்புப் பகுதியை நிலைகுலைய வைத்தது: மிகேல் ஒயாசபால் பந்தை எடுத்துச் சென்று, பெனால்டி பாக்ஸிற்குள் வேகமாக முன்னேறிய ஃபேபியன் ரூயிஸிற்கு அனுப்பினார். ரூயிஸ் பந்தை மீண்டும் பின்னோக்கி (cut back) வழங்கினார், ஆனால் அந்தப் பந்தை உள்வாங்கிக்கொள்ள ஒயாசபால் தயாராக இல்லாததால், ஸ்பெயினின் அந்த தாக்குதல் முயற்சியானது கோல் வாய்ப்பின்றி முடிந்தது. ஸ்பெயினின் நட்சத்திர வீரர் குபார்சி (Cubarsi) மிகச்சிறந்த ‘திரூ பால்’ (through ball) ஒன்றை வழங்க, அது வலது பக்கத்தில் இருந்த டேனி ஓல்மோவைச் சென்றடைந்தது. ஓல்மோ வழங்கிய துல்லியமான ‘கட் பேக்’ கிராஸை, குகுரெல்லா கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால், அர்ஜென்டினா வீரர் மொலினா கடைசி நேரத்தில் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்து, அந்தப் பந்தை மிகக்கடினமான முறையில் தடுத்து வெளியேற்றினார்.

ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணி தனது ஆட்டத்தில் மாற்றங்களை செய்தது. மிகேல் ஒயாசபால் மற்றும் ஃபேபியன் ரூயிஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டு, ஃபெரான் டோரஸ் மற்றும் பெட்ரி ஆகியோரை களமிறக்கியது.

களமிறங்கிய சில நிமிடங்களிலேயே பெட்ரி, அர்ஜென்டினா வீரர்களைக் கடந்து மின்னல் வேகத்தில் முன்னேறி, டேனி ஓல்மோவிற்கு பந்தை பாஸ் செய்தார். ஓல்மோ அடித்த பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் எமி மார்டினெஸ் சரியாகப் பிடிக்கத் தவறிவிட்டதால், அது கார்னர் வாய்ப்பாக மாறியது.

வலது பக்கத்திலிருந்து லமின் யமால் கார்னர் வாய்ப்பை வழங்கினார், ஆனால் ஸ்பெயின் அணி அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியது. அடுத்ததாக அலெக்ஸ் பாவேனா வழங்கிய அருமையான கிராஸ் பந்தை, லமின் யமால் பெற்று மீண்டும் பெனால்டி பாக்ஸிற்குள் அனுப்பினார்.

லமின் யமாலின் அந்த கிராஸ் பந்தை ஃபெரான் டோரஸ் உயரக் குதித்து தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால், பந்து நேராக எமி மார்டினெஸின் கைகளில் சென்றததால் அர்ஜென்டினா தப்பித்தது.

ஏற்கனவே முதல் பாதியில் காயத்தால் லிசாண்ட்ரோ மார்டினெஸ் வெளியேறிய நிலையில், ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மிக முக்கியமான தற்காப்பு வீரரான குட்டி ரொமேரோவும் (Cuti Romero) காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். குட்டி ரொமேரோவிற்குப் பதிலாக ஃபாகுண்டோ மெடினா, ரோட்ரி டி பாலுக்குப் பதிலாக ஜுலியன் சிமியோனி களமிறக்கப்பட்டனர். இதனால் அர்ஜென்டினா அணியிடம் முறையான சென்டர்-பேக் (centre-back) வீரர்கள் எவரும் இல்லாத சூழல் உருவானது. மிட்பீல்டரான லியாண்ட்ரோ பரேடெஸ் பின்வரிசைக்கு (backline) தற்காப்பு வீரராக மாற்றப்பட்டார். இதனால் அர்ஜென்டினாவின் மத்திய களத்தில் (midfield) என்சோ பெர்னாண்டஸ் மற்றும் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஆகிய இருவர் மட்டுமே விளையாடினர்.

ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி தனது தாக்குதலை வலுப்படுத்த, டேனி ஓல்மோ மற்றும் அலெக்ஸ் பாவேனா ஆகியோரை வெளியேற்றிவிட்டு, ‘சூப்பர் சப்’ மிகேல் மெரினோவை களமிறக்கியது.

ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில், ஸ்பெயினின் இளம் நட்சத்திர தற்காப்பு வீரரான பாவ் குபார்சி (Pau Cubarsi) பெனால்டி பாக்ஸின் வலது பக்கத்திலிருந்து மிக ஆக்ரோஷமான முறையில் பந்தை அடித்தார். ஆனால் கோலாக மாறவிருந்த அந்த ஆபத்தான பந்தை, அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமான கோல்கீப்பர் எமி மார்டினெஸ் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, பஞ்ச் (punch) செய்து வெளியேற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் ஒரு கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 77-வது நிமிடத்தின்படி, ஸ்பெயின் அணி 11 முறை கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால் அர்ஜென்டினா அணி ஒருமுறை கூட கோல் அடிக்க முயற்சிக்கவே இல்லை என்பது அதிர்ச்சியை தந்து கொண்டே இருந்தது. மைதானத்தின் மத்திய பகுதியில் ஸ்பெயினின் ஆதிக்கம் அர்ஜென்டினாவை முற்றிலுமாக முடக்கியது. அர்ஜென்டினா வீரர்கள் தற்காப்புப் பணிக்காகப் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

கடைசி நிமிடங்களில் ரெட் கார்டு

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் நடுவரால் மைதானத்திலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்பெயினின் இளம் வீரர் பாவ் குபார்சி மீது மிகக் கொடூரமான முறையில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், மோதினார். இந்த மோதலில் குபார்சி காற்றில் தூக்கி வீசப்பட்டார். நடுவர் உடனே என்சோ பெர்னாண்டஸிற்கு இரண்டாவது மஞ்சள் அட்டையைக் காண்பித்தார், இதன் மூலம் அவர் சிவப்பு அட்டை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

ஆட்ட நேரம் நீட்டிப்பு

விறுவிறுப்பான 90 நிமிட ஆட்டம் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு (தலா 15 நிமிடங்கள் கொண்ட இரு பாதிகள்) நீட்டிக்கப்பட்டது.

இறுதி திக் திக் நிமிடங்கள்

கூடுதல் நேரம் தொடங்கியவுடனேயே ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. பெட்ரி தனது இடது காலால் பந்தை அழகாகச் சுழற்றி (chip) அனுப்பினார். அந்தப் பந்து பின்தங்கியிருந்த நிக்கோ வில்லியம்ஸைச் சென்றடைந்தது. நிக்கோ வில்லியம்ஸ் அதைத் தலையால் முட்டி கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமி மார்டினெஸ் மின்னல் வேகத்தில் தனது வலது பக்கம் பாய்ந்து, பந்தை முட்டித் தடுத்தார்.

கூடுதல் நேரத்தின் விறுவிறுப்பான கட்டத்தில், ஸ்பெயின் அணி கோல் அடித்து கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த கோலை நடுவர் நிராகரித்துவிட ஸ்பெயின் அப்செட் ஆனது. லமின் யமால் பந்தை பாக்ஸிற்குள் அனுப்ப, அது மெரினோவை நோக்கிச் சென்றது. அந்தப் பந்தைப் பெற மெரினோ முயற்சிக்கும்போது, அவருக்குப் பின்னால் இருந்த அர்ஜென்டினா வீரர் ஓட்டமெண்டி கீழே விழுந்தார். மெரினோ, ஓட்டமெண்டியைத் தொடவில்லை என்று களத்தில் இருந்தவர்கள் கருதினாலும், ஓட்டமெண்டி கீழே விழுந்ததை ஒரு ‘ஃபவுல்’ (Foul) என்று நடுவர் கோலை ரத்து செய்தார். ஓட்டமெண்டி விழுந்ததால் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமி மார்டினெஸும் தடுமாற, அந்தப் பந்து நிக்கோ வில்லியம்ஸிடம் சென்றது. அவர் கோல் அடித்தாலும், அதற்கு முன்னதாக நடந்த அந்தப் பந்தை மெரினோ கையாள முயன்ற தருணத்தில் ‘ஃபவுல்’ நிகழ்ந்ததாக நடுவர் தெரிவித்தார்.

கூடுதல் நேரத்தின் முதல் 15 நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணிகளும் இன்னும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் அதி உச்சகட்ட பரபரப்பானது.

106-வது நிமிடத்தில் கோல் அடித்த ஸ்பெயின்

கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக அர்ஜென்டினாவின் தற்காப்பு அரணைக் கடந்து கோல் அடித்தது. ஃபெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதனால் அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கடைசி நேரத்தில் மெஸ்ஸி மாயஜால முயற்சி

ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஷார்ட் கார்னர் (short corner) முறையில் பந்தை எடுத்து ஆடிய ஆட்டம் அத்தனை பேரையும் மூச்சடைக்க வைத்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து 110 நிமிடங்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா பதிவு செய்த முதல் ஷாட் (first shot) இதுதான். அடுத்தும் இதே போல மீண்டும் ஒரு ஷார்ட் பாஸ் மூலம் பந்தை பெனால்டி பாக்ஸின் விளிம்பிற்கு தட்டிவிட்டார் மெஸ்ஸி.

வாகை சூடிய ஸ்பெயின் அணி

இறுதியில் ஸ்பெயின் அணி, ‘ ஜாம்பவான்’ அர்ஜெண்டினாவை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அர்ஜென்டினா அணி மிக மோசமாக விளையாடிய போட்டியாக இன்றைய போட்டி அமைந்துவிட்டது அதன் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் உற்சாகக் கோஷம் எழுப்பித் தங்களின் வெற்றியைத் துள்ளி குதித்து கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்று, கால்பந்து உலகில் மீண்டும் தனது ராஜ்ஜியத்தை நிலைநாட்டியுள்ளது.

2-வது முறையாக ஸ்பெயின் சாம்பியன்

ஸ்பெயின் அணி இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில், நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதன்முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியின் கூடுதல் நேரத்தில் (Extra time) ஆந்த்ரே இனிஸ்டா (Andrés Iniesta) அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடித்திருந்தார்.

அது என்ன ‘லா ரோஜா’?

‘லா ரோஜா’ (La Roja) என்பது ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் செல்லப்பெயர்.

இதன் பொருள் ஸ்பானிஷ் மொழியில் “சிவப்பு நிறத்தவர்” அல்லது “சிவப்பு அணியினர்” என்பதாகும். ஸ்பெயின் அணியின் சீருடை பாரம்பரியமாகச் சிவப்பு நிறத்தில் இருப்பதால், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அந்த அணியை அன்போடு ‘லா ரோஜா’ என்று அழைக்கின்றனர். பிரேசில் அணியை ‘செலேசாவ்’ என்று அழைப்பதைப் போல, ஸ்பெயின் அணியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற பெயர் இது.

ஆறாத காயத்துடன் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது. 10 வீரர்களுடன் இறுதிவரை போராடியும், மெஸ்ஸியால் வெற்றியை எட்ட முடியவில்லை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share