நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், பட்டியல் எழுத்தரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று (ஜூலை 19) நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த வருவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது, அங்கு நெல் விற்பனை செய்த விவசாயிகளிடம் கொள்முதல் நடைமுறைகள் குறித்தும், ஏதேனும் புகார்கள் உள்ளதா என்றும் அமைச்சர் கேட்டறிந்தார்.
விவசாயி புகாரால் பரபரப்பு:
அப்போது அங்கிருந்த விவசாயி ஒருவர், “நெல் கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை பட்டியல் எழுத்தர் வேல்முருகன் லஞ்சம் வாங்கினார்” என்று அமைச்சரிடமே நேரடியாகப் புகார் தெரிவித்தார். இதனால் கொள்முதல் நிலைய வளாகத்தில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
விவசாயியின் புகாரை அடுத்து, தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் வேல்முருகனை உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யுமாறும், அவர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவிட்டார்.
மேலும், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை நெல் விற்பனை செய்த அனைத்து விவசாயிகளிடமும் முறையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
