கோவையில் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்க தொடர்ச்சியாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வினோத்குமார் (வயது 35) உள்ளிட்ட காவலர்கள் வழக்கம் போல் ரோந்து பணிக்கு சென்றனர்.
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய 2-ம் கட்ட வளைவு பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவரும் அவரது ஆண் நண்பரும் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர்கள் இளம் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் காவலர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார். அவர் அழைத்துச்சென்ற பகுதியில் யாரும் இல்லாத நிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்ததை கூறி அழுதார். தொடர்ந்து அந்த பெண் கூச்சலிட்டதும், காவலர் வினோத்குமார் அங்கிருந்து கிளம்பி உள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீஸில் பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து வினோத்குமார் மீது துடியலூர் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் கூறும்போது, சம்பவம் நடந்த அன்று, வினோத்குமாருடன் ரோந்து சென்ற போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
கோவையில் ஆண் நண்பருடன் தனியாக நின்ற இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
