உதயநிதிக்கு அமைச்சர்கள் கண்டனம்!

Published On:

| By Mathi

TN Ministers Condemn Udhayanidhi

முதல்வர் விஜய் குறித்து விமர்சித்தாக திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் நேற்று திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார் உதயநிதி ஸ்டாலின். அவரது இந்தப் பேச்சுக்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் போலீசில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஆனந்த்: எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

ADVERTISEMENT

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.

Decent Approach – Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.

ADVERTISEMENT

அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.

அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.

மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் ‘ஆபாச’நிதி.

தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் – அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.

பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா – தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்! ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share