பீகாரில் செம்ம ‘சம்பவம்’: பாஜக தேசியத் தலைவர் 4 முறை வென்ற தொகுதியை கைப்பற்றிய பிரஷாந்த் கிஷோர்!

Published On:

| By Mathi

Prashant Kishor Captures BJP's 30-Year Fortress

பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா செய்த பீகாரின் பங்கிப்பூர் (BANKIPUR) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவரான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். இதனால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பீகாரின் பங்கிப்பூர் சட்டசபை தொகுதி முன்னர் பாட்னா மேற்கு சட்டசபை தொகுதியாக இருந்தது. 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பாஜக தொடர்ந்து இத்தொகுதியில் வென்றது.

ADVERTISEMENT

தற்போது பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நிதின் நபின், 2006-ல் இத்தொகுதியில் வென்ற பாஜக எம்.எல்.ஏ.

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் இந்த தொகுதி பங்கிப்பூர் சட்டசபை தொகுதியானது. இதன் பின்னர் பங்கிப்பூர் தொகுதியில் நடந்த 2010, 2015, 2020, 2025 என அடுத்தடுத்து 4 தேர்தல்களிலும் நிதின் நபின் வெற்றி பெற்றிருந்தார்.

ADVERTISEMENT

கடந்த 30 ஆண்டுகாலம் பாஜக கோட்டையாக இருந்து வந்தது பங்கிப்பூர் தொகுதி.

கடந்த ஜனவரி மாதம் பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார். இதனையடுத்து எம்.எல்.ஏ. பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்.பி.யானார்.

ADVERTISEMENT

இதனால் பங்கிப்பூர் சட்டசபை தொகுதிக்கு ஜூலை 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நீரஜ்குமார், ஆர்ஜேடி வேட்பாளராக ரேகா குமாரி, ஜன் சுராஜ் கட்சி வேட்பாளராக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் களம் கண்டனர்.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலை வகித்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தார்.

மொத்தம் 32 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. 31-வது சுற்றில் பிரசாந்த் கிஷோர் 18953 வாக்குகள் முன்னிலை பெற்று வாகை சூடினார்.

பிரசாந்த் கிஷோர் 63, 203 வாக்குகளைப் பெற்றார். பாஜகவின் நீரஜ் குமார் 44,250 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

பாஜகவின் 30 ஆண்டுகால கோட்டை என்பதுடன் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தொடர்ந்து 4 முறை வென்ற தொகுதியான பங்கிப்பூரில் பிரசாந்த் கிஷோர் வென்றுள்ளது தேசிய அளவில் பாஜகவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூக வகுப்பாளராக இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் முதல் முறையாக பீகார் சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைகிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share